உள் இட ஒதுக்கீடு -சமூகநீதி -தேசியம்.

பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு பொருந்தும் எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
மேலும் பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது.

பட்டியல் பிரிவில் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகப் பிரிவினர் நீண்டகாலம் நடத்திய போராட்டத்தின் விளைவாக பஞ்சாப் , ஆந்திர அரசுகள் பட்டியல் பிரிவில் தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டங்களை இயற்றின. ஆந்திராவில் மாதிக உள்ளிட்ட சமூக மக்களின் பின்தங்கிய நிலையை ஆராய இராமச்சந்திர ராஜூ தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பட்டியல் பிரிவில் உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை ஆந்திர அரசு இயற்றியது.

ஆந்திராவைப் போலவே பஞ்சாபில் பட்டியல் பிரிவில் உள்ள பால்மீகி , மால்பாய் சீக்கியர்களுக்கு உள் இடப்பங்கீடு வழங்கும் சட்டத்தை பஞ்சாப் அரசு இயற்றியது.

ஆந்திர அரசின் சட்டம் சின்னையா × ஆந்திர அரசு (2005) எனும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. பட்டியல் பிரிவினர் ஒரே தன்மையுள்ள வகைப்பாட்டினர் ( Homogeneous) அவர்களுக்குள் உள் இடப்பங்கீடு செல்லாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உள்ளடக்கமாக இருந்தது.

ஆந்திராவைத் தொடர்ந்து பஞ்சாப் உள் இட ஒதுக்கீடு சட்டமும் சிக்கலாகியது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக அன்றைய ஐமுகூ தலைமயிலான ஒன்றிய அரசு அமைத்த உஷா மெக்ரா ஆணையம் பட்டியல் பிரிவில் உள் இடப்பங்கீடு வழங்கவும் அதன் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் 341, 342 பிரிவில் உரிய திருத்தங்களைச் செய்து உள் இட ஒதுக்கீடு மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இவ்வேளையிலேயே கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அருந்ததியர் மக்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பில் அவர்களுடைய பின்தங்கிய நிலைமையின் காரணமாக பட்டியல் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் 3% உள்இடப்பங்கீடு வழங்கியது.

2005 ன் சின்னையா தீர்ப்பை மறுவரையறை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் அருண்மிஸ்ரா அமர்வு அதனை 7 பேர் கொண்ட உச்ச அமர்வுக்கு மாற்றியது. கடந்த நான்கு ஆண்டுகளாக
நடந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பட்டியல் பிரிவில் உள்வகைப்பாடு செய்யவும் உள் ஒதுக்கீடு செய்யவும் மாநில அரசுக்கு உரிமை வழங்கி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

ஒட்டுமொத்த இந்த வழக்கில் மாநிலங்களே முன்னணியாக உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்டங்களை இயற்றியும் அதனை நடைமுறைப்படுத்தவும் செய்தன.
இதில் ஒன்றிய அரசுக்கு எந்த பங்கும் இல்லை.

சமூகநீதி , இட ஒதுக்கீடு என்றாலே இந்திய தேசிய கட்சிகள் அரள்வதும் மக்கள் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கு வழி வகுக்கும் என்றே எப்போதும் கூறிவந்தன.

1921 ல்சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி முதல்முறையாக வெளியிட்ட அரசு ஆணையே சமூகநீதி
உரிமைக்கு அடிக்கோல் நாட்டியது.
1923 ல் தேசிய கட்சியான காங்கிரசு பார்ப்பனரல்லாதார் சிக்கல் குறித்து வாதம் நடத்த மறுத்தது.

1925 ல் பெரியார் கல்வி , வேலைவாய்ப்பில் வகுப்புவாரி இடப்பங்கீடு வழங்க மறுத்த காங்கிரசில் இருந்து விலகி தனி இயக்கம் கண்டார்.

பிரிட்டீசு காலத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்த சில நாட்களிலேயே செண்பகம் துரைசாமி வழக்கை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் இடப்பங்கீட்டை நீக்கி தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த போராட்ட அறிவிப்பின் காரணமாக சமூகநீதியை காக்கும் வகையில் முதல் அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் 15 (4) பிரிவு சேர்க்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ,பட்டியல் பிரிவில் உள் இட ஒதுக்கீடு என சமூகநீதிக் கோரிக்கையை விரிவுபடுத்தியது மாநிலங்களேயாகும். ஒன்றிய அரசின் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடப்பங்கீடு வழங்க விபிசிங்கிற்கு உறுதியான ஆதரவை வழங்கியது தமிழகமேயாகும்.

1953 ல் பிற்புடத்தப்பட்டோருக்கு கல்வி , வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்கவென அமைக்கப்பட்ட காலே கலேகர் ஆணையத்தின் அறிக்கையை நேரு அரசாங்கம் கிடப்பில் போட்டது.

காலேகலேகர் ஆணையத்திற்குப் பிறகு முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமான சட்டநாதன் ஆணையத்தை தமிழ்நாடு அரசாங்கமே அமைத்தது.
இவ்வாறு மாநில அரசுகளும் கட்சிகளுமே மக்களுக்குத் தேவையான முடிவுகளை சதூகநீதி அடிப்படையில் எடுத்திருக்கிறது என்பதே இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.

உள் இட ஒதுக்கீடு வழங்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பது சமூகநீதிக்கு எதிரானது எனக் கூறுவதற்கு எந்த உண்மை அடிப்படையும் இல்லை.

பாஜக அரசுக்கு பட்டியல் மக்கள் , பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் இடப்பங்கீட்டு உரிமையை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் நீண்டகால அரசியல் நோக்கம்! அது உள் இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது என்பதெல்லாம் அது பட்டியல் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தானே ஒழிய வேறு நோக்கம் அதற்கு கிடையாது .

இரண்டாவது உச்சநீதிமன்றமும் உள் இட ஒதுக்கீடு கோரிய மக்களின் நீதியான போராட்டமே உச்சநீதிமன்றத்தை கோட்பாட்டு அடிப்படையில் பட்டியல் பிரிவில் உள் இட ஒதுக்கீட்டை ஏற்க வைத்ததே தவிர பாஜக அரசின் தயவினால் அல்ல.

அடுத்ததாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பட்டியல் பிரிவில் கிரிமிலேயர் பின்பற்ற வேண்டும் என்று இருப்பதாக வாதிடுவது சட்டப் பிழை. கிரிமிலேயர் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருப்பது நீதிபதிகளின் சொந்த கருத்து (Obeiter dictum )தானே ஒழிய அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரையல்ல.

மேலும் ஒன்றிய அரசின் அமைச்சரவை பட்டியல் பிரிவில் கிரிமிலேயர் கொண்டு வரும் திட்டம் இல்லை என நேற்று அறிவித்தருக்கிறது.அதனால் கிரிமிலேயருக்கும் பட்டியல் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிரிமிலேயர் சிக்கலை பூதமாகக் காட்டி உள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு அரசியல் ஞாயம் இல்லை என்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள உண்மை.

உண்மை இவ்வாறு இருக்க சமூகநீதியையும் மாநில உரிமையையும் பாதுகாக்கும் உச்சநீதிமன்றத்தின் பட்டியல் பிரிவில் உள் இட ஒதுக்கீட்டை வரவேற்பதே உண்மையான சமூகநீதியாகும்.

அதிகாரங்களை ஒன்றியத்தில் குவித்து ஒரு இந்துத்துவ பாசிச அரசை நிறுவத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாநிலங்களின் உரிமையை சனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும். இதனை மறுப்பவர்கள் சமூகநீதிக்கும் சனநாயகத்திற்கும் எதிரான அணியில் எப்போதும் விழ காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தான் நாம் புரிந்துகொள்ள முடியும்.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *