திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா 1805 ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது என அதன் முன்மண்டப வாயிலில் உள்ள கல்வெட்டை காட்டி, இத்தர்கா 220 ஆண்டுக்கு முன்பு வந்தது என்கிற கருத்தை பரப்புகிறார்கள். சிக்கந்தர் தர்கா குறித்து பல்வேறு காணொளிகள் இணையத்தில் உள்ளது. அதில் தர்காவின் கட்டட அமைப்பை காணலாம்.

துவக்கத்தில் பாறை இடுக்கில் சமாதியாக மட்டும் இருந்த சிக்கந்தர் அடக்கத்தலம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சி பெறுகிறது. பாறை இடுக்கில் உள்ள சிக்கந்தரின் சமாதியை சுற்றி முதலில் ஒரு மண்டபம் எழுப்பட்டடுள்ளது.
அதற்கு அடுத்து ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் லுக்மான் ஹக்கீம் என்பவரின் அடக்கத்தலம் இருக்கிறது.
அதற்கு அடுத்துநிலையில் இன்னொரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் நுழைவாயிலில் தான் 1805 என்று கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு காலத்தில் கட்டடப்பட்டது. இந்த மண்டபத்தில் உள்ள 1805 என்ற கல்வெட்டை கொண்டு சிக்கந்தர் தர்காவின் காலத்தை கணிக்க முடியுமா?
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நுழைவாயிலாக உள்ள இராஜ கோபுரம் கிபி 1583 ஆம் ஆண்டு கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என கோயில் கல்வெட்டு கூறுகிறது. கோபுரத்தின் காலத்தை வைத்து கோயிலின் காலத்தை முடிவு செய்ய முடியுமா? அதுபோல 1805 ஆம் ஆண்டு நுழைவாயில் மண்டபத்தின் கல்வெட்டை வைத்து சிக்கந்தர் தர்காவின் காலத்தை முடிவு செய்ய முடியாது.
சிக்கந்தர் தர்கா பற்றி குறிப்பிடும் சில ஆங்கிலேய காலத்து ஆவணங்களை பார்க்கலாம்.
1764 ஆம் ஆண்டு சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்ட குறிப்பு எஸ்.சி. ஹில் 1914இல் எழுதிய யூசப் கான் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (YUSUF KHAN: THE REBEL COMMANDANT, BY S. C. HILL, பக் 209).
1868 ஆம் ஆண்டு நெல்சன் மெனுவலில் ”இசுலாமிய துறவியின் கல்லறையும், தூய்மையான சுனையும் திருப்பரங்குன்றத்தில் இருப்பதால் இம்மலை புகழ் பெற்றதாக விளங்குகிறது. அந்த கல்லறையைச் சுற்றி ஒரு சிறிய நினைவுச் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு புகழ்பெற்ற இந்துக் கோவில் உள்ளது. இசுலாமிய துறவியின் நினைவிடமும் புகழ்பெற்ற இந்து கோயிலும் ஒரேமலையில் உள்ளதால் இவ்விடம் சிறப்புற்று விளங்குகிறது”. (Madura country manual J H nelson Gazettee 1868, பக் 9)
1906 ஆம் ஆண்டு பிரான்சிஸ் எழுதிய மதுரை கேசட்டில் ”மலையின் உச்சியில் சிக்கந்தர் என்ற இசுலாமிய துறவியின் கல்லறை அமைந்துள்ளது. அவர் வாழ்ந்து மடிந்த துறவியாக கூறப்படுகிறது. இரண்டு பெரிய பாறைகளுக்கிடையிலான ஒரு பிளவில் அவரது கல்லறை அமைந்திருக்கிறது. அதன் முன்புறத்தில் இந்து பாணியில் எழுபட்ட தூண்களால் கொண்ட புதிய மண்டபம் ஒன்றும், முஸ்லீம் கட்டிடக் கலையின் முறையில் அமைக்கப்பட்ட மினார்களும் உள்ளன. அந்த கட்டிடம் இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றன. இந்தக் கட்டிடத்தைப் பார்வையிட வரும் மக்களும் அதன் கட்டிடக் கலையைப் போலவே கலவையானவர்களாக உள்ளனர். இந்த இடத்தை இந்துக்களும் முஸ்லீம்களும் இருவரும் அடிக்கடி வந்து வழிபடுகின்றனர்”. (Madurai Gazette Francis 1906 பக் 279-280)
1923 இராம அய்யர் தீர்ப்பில் சிக்கந்தர் தர்காவின் பழமை குறித்து விவாதிக்கப்படுகிறது. ”இந்தச் சூழ்நிலையில், அந்த மசூதி பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிப்பது பயனுள்ளதாக இருக்கலாம். அது ஒரு பழமையான மசூதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 1815 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மானியம் (Manyams) பதிவேட்டின் ஒரு பகுதியிலிருந்து எடுத்துள்ள குறிப்பில், சிக்கந்தர்மலை மசூதியின் செலவுகளை ஈடு செய்ய தனக்கன்குளம் என்ற கிராமம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.1863 ஆம் ஆண்டின் இனாம் பதிவேட்டில் (Inam Register) இருந்து எடுத்துள்ள ஒரு குறிப்பின்படி, அந்தக் கிராமம் கி.பி. 1799 க்கு முன்பே அந்த மசூதிக்குத் தானமாக வழங்கப்பட்டிருந்ததை காட்டுகிறது. மேனுவல் மற்றும் மதுரை மாவட்ட கசட்டியர் ஆகியவற்றிலும் மசூதியையும் சிக்கந்தர்மலையையும் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால், அந்த மசூதி நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது”. (1923 Judgement Pg No 25-26/175).
எந்த நூற்றாண்டு என்று அறியமுடியாத போகர் சித்தர் அவர்களின் பாடலில் வரும் சிக்கிந்தா மலை என்கிற குறிப்பை இங்கு சான்றாக காட்டுவது பொருத்தமாகாது. திருப்பரங்குன்றம் மலையில் அடங்கி இருக்கும் சிக்கந்தர், ஏர்வாடியில் அடங்கியிருக்கும் செய்யது இப்ராஹிம் அவர்களுடன் இசுலாமிய சமயத்தை பரப்ப கிபி 11 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார் என எஸ்.எம்.ஏ காதர் அவர்கள் எழுதியுள்ளார். இந்த தர்கா ஆயிரமாண்டு பழமையானது என 1920-23 நடைபெற்ற வழக்கில் இசுலாமிய தரப்பினர் வாதங்களை முன்வைத்துள்ளனர். எனினும் அக்கருத்தை ஏற்பதற்கு உறுதியான வரலாற்று சான்றுகள் இல்லை.
முற்கால மன்னராட்சிக்கு திரும்புவதைவிட தற்கால ஜனநாயகத்தின் மாண்புகளை வலுப்படுத்துவோம்.
அறியப்பட்ட வரலாற்று ஆவணங்களில் இருந்து கீழ்காணும் ஐந்து விசயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
• 1764 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதி சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.
• 1799 ஆங்கிலேய ஆவணங்களை பார்க்கிற போது சிக்கந்தர் தர்கா 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம், அதாவது 1699 ஆண்டிற்கு முன்பு இருந்தே திருப்பரங்குன்றம் மலையில் இருந்து இருக்கலாம் என்கிற சார்பு நீதிமன்ற நீதிபதி திரு. ராம அய்யர் அவர்கள் அளித்த 1923ஆம் ஆண்டு தீர்ப்பு கவனிக்கதக்கது.
• கட்டிடங்கள் ஏதுமற்ற சிக்கந்தர் சமாதியை சுற்றி மண்டபம் எழுப்பட்டதை 1868 ஆம் ஆண்டு நெல்சன் மேனுவல் குறிப்பு தெரிவிக்கிறது.
• சிக்கந்தர் தர்காவில் மினார்களுடன் நிறைவடையாத நிலையில் கட்டிடம் இருப்பதை 1906 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கேசட்டியர் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.
• ஒரே மலையில் இருவேறு சமயங்கள் ஒற்றுமையுடன் இருப்பதே திருப்பரங்குன்றத்தின் சிறப்பு என பல்வேறு ஆங்கிலேயர் கால ஆவணங்கள் குறிப்பிடுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் முருகன், சமணம், சைவம், வைணவம், இசுலாம் என பல்வேறு சமயங்கள் நிலைத்திருப்பதே தமிழ்நாட்டின் நல்லிணக்க மரபிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அந்த மரபு பாதுகாக்கபட வேண்டும்.

தமிழ்தாசன்
Leave a Reply