மனிதனின் குரல் 2 தலையை உடைக்கும் சம்பிரதாயம்

சில கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பதை பார்த்திருப்பீர்கள். அதனால் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வருவதையும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்; ஆனால், தலையையே காணிக்கையாக உடைப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!

ஆம், அது பிள்ளையாருக்கு முன்புதான் நடக்கிறது. பிள்ளையாருக்கு முன் உடைக்கப்படும் தேங்காய் ஒவ்வொன்றும் வெறும் தேங்காய் அல்ல அது சிவபெருமானின் தலை.

விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டுவிட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

இது தெய்வத்தின் குரலில் பெரிய சங்கராச்சாரி சொல்கிற காரணம்.

பிள்ளையாரை சிறுவன் என்று வருணிக்கிறார் சங்கராச்சாரி. சிறு பிள்ளைகள் விபரம் தெரியாமல் தகப்பனிடம் தலையை உடைத்து எனக்கு பலி கொடு என்று கேட்டால் அதையெல்லாம் கொடுக்க முடியாது என்று சிறுவனுக்கு விளக்காமல், தலையைப்போலவே ஒன்றை உருவாக்கி அதை உடையுங்கள் என்பது எந்த விதத்தில் ஞாயம்.

இந்துக்கள் என்று தங்களை நம்பிக்கொண்டிருப்போர் வழிபடும் நாட்டார் தெய்வங்களுக்கு மிருக பலிகள் (நாண் வெஜ்) செய்வது உண்டு. ஆனால் சனாதனக் கடவுளாகிய பிள்ளையார் அவாளைப் போலவே பியூர் வெஜிட்டேரியன். அவர் தன் தகப்பனின் தலையையே பலியாக கேட்டார் என்று கூறுகிறார் சங்கராச்சாரி. அப்படி என்றாலும் சிவன்தானே தலையை உடைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும். மூன்று புள்ளிகள் இருக்கிறது, உருண்டை வடிவமாக இருக்கிறது என்பதைத் தவிர தலைக்கும் தேங்காய்க்கும் என்ன சம்பந்தம்.

மனிதனுக்குள் எழும் இந்த எளிமையான கேள்விகளுக்கு… தெய்வத்தின் குரல் பதில் சொல்லுமா..?

1941ல் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறார் சங்கராச்சாரி. அப்போது கோவிலில் உடைக்கப்பட்ட தேங்காய்களை பொறுக்க சிறுவர்கள் வந்தபோது சிலர் கூட்டம்போடாதீர்கள் என்று விரட்டினார்களாம், அப்போது ஒரு சிறுவன் சிதறுகாய் என்பது எங்களுக்கு பாத்தியதை என்று உரிமையோடு கேட்டான், அதனால் பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காய் பிள்ளைகளுக்கே முழு பாத்தியதை உரியது என்று போதிக்கிறார்.

சிதறுகாய் பொறுக்கித்தான் தங்கள் பசியை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்களை வைத்திருந்தது யார்?

உற்பத்தி நடவடிக்கையில் என்றுமே ஈடுபட்டிராத பார்ப்பனக் கூட்டத்திற்கு நெய்யும், பருப்பும், அக்கார அடிசிலும் வசதியாக கிடைத்தபோது, அவற்றையெல்லாம் உற்பத்தி செய்த மக்கள் வாசலில் நின்று தேங்காய் பொறுக்கிக் கொண்டிருந்தனர். இதுதானே கடந்த பத்து இருபது வருடங்களுக்கு முன்புவரை உள்ள நிலை.

அந்த தேங்காயைக்கூட தங்கள் கையால் கொடுக்கக் கூடாது, தொட்டால் தீட்டாகிவிடும் என்றுதான் தெருவில் உடைத்து சிதறடித்துவிட்டு, நம்மை பொறுக்க விட்டுவிட்டது இந்தக் கூட்டம்.

இப்படி மிருகங்களை விடக் கீழாக நம்மை நடத்தியவர்கள்தான், இன்று சொல்கிறார்கள் பன்னுக்கும், ரொட்டிக்கும் மதம் மாறி விட்டார்கள் என்று.

வெள்ளைக்காரன் வெறும் பன்னையும் ரொட்டியையும் தரவில்லை, முதலாளித்துவம் என்கிற புதிய பொருள் உற்பத்தி முறையையே வழங்கி இருக்கிறான். அதனால்தான் இன்று பன்னும், ரொட்டியும் மட்டுமல்ல தேங்காயும் எல்லோரும் வாங்கும்படி மலிவாகக் கிடைக்கிறது.

20 ரூபாய் கொடுத்தால் தேங்காய், என்றாகிவிட்டதால், இன்று உடைக்கப்படும் சிதறுகாய்கள் எடுப்பதற்கு ஆளற்று அனாதையாகக் கிடக்கின்றன.

சங்கராச்சாரி மேலும் சொல்கிறார்

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே
அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

என்று

இதுதான் தத்துவம் என்றால் மேலே சொன்ன கதைகள் எதற்காக. இந்த தத்துவத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை வெறும் பாடமாக எடுத்தால் போதுமே..! ஏன் தேங்காயை உடைத்து வீணடிக்க வேண்டும்.

ஒரு நடவடிக்கைக்கு இதுபோன்ற பல்வேறு காரணங்களைச் சொல்வதும், அதற்குள் ஏதோ ஒரு தத்துவம் மறைந்திருப்பதாக நம்பச் சொல்வதும் ஒரு நூதனமான சனாதன மோசடி. இதைத்தான் சங்கராச்சாரி நயமாகச் செய்கிறார்.

இவர்கள் சொல்கிற கதைகளும், கற்பிதங்களும் துளியளவும் பகுத்தறிவுக்கு பொருந்திப் போவதில்லை.

யானையை கடவுள் என்று போற்றும் இவர்கள் அதற்கு வாகனமாக கொடுத்திருப்பது மூஞ்சூறு என்கிற எலி.

வாகனம் என்பது என்ன? அது ஒருவர் ஏறி பயணிப்பது. புலியில் ஐயப்பனும், சிங்கத்தில் துர்கையும் ஏறி அமர்ந்து வருகிறார்கள் என்று கூறினால் கூட, அந்த காட்டு விலங்குகள் மேல் சவாரி செய்வது சாத்தியமில்லை என்றாலும் கொஞ்சம் கற்பனையாவது செய்து பார்க்கலாம். ஆனால் ஒரு யானையை எலியின் முதுகில் ஏற்றுவதுபோல் கற்பனை கூட பண்ண முடியவில்லையே. ஏன் இப்படி ஒரு சிறிய வாகனம் என்று கேள்வி கேட்டால் அதற்கு “ஸ்தூலம் பெரிதாக இருந்தாலும் பக்தர்களின் மனதில் கனமில்லாமல் இருப்பேன் என்று காட்டுவதற்காகத்தான் இந்த வாகனம்” என்று உருட்டுகிறார் சங்கராச்சாரி.

இந்த கம்பிகட்டுற கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டு, இது எங்கள் நம்பிக்கை, அதை கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று வெட்கமில்லாமல் நம்மிடம் சண்டைக்கு வரவேண்டுமென்றால், ஒரு சங்கியாக வாழ்வது எவ்வளவு கடினமென்று யோசித்துப் பாருங்கள்.

கட்டுரையாளர்: – சுமன் கவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *