திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சுமார் 216 ஆண்டுகள் பழமையான நில அளவை கற்களை பாதுகாக்க வேண்டும்

அனுப்புநர்,

சே. வாஞ்சிநாதன்

மீ.த. பாண்டியன்

ஒருங்கிணைப்பாளர்கள்

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு

பெறுநர்,

மதுரை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகம்,

மதுரை மாவட்டம்

ஐயா,

பொருள்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சுமார் 216 ஆண்டுகள் பழமையான நில அளவை கற்களை தொல்லியல் வரலாற்று சின்னமாக அறிவித்து, மதநல்லிணக்க ஆளுமைகள் ஆசான் திருவள்ளுவர் & கர்னல் பென்னி குயிக் பெயர்களை சூட்டக் கோருதல்

1. திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் திரு. A. அப்துல் ஜப்பார் (9626419868) என்பவர் 2005 தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சென்னை, கிண்டி, இண்டஸ்டிரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அமைந்துள்ள ”சர்வே ஆப் இந்தியா” ஒன்றிய அரசின் நிறுவனத்திற்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவின் அருகே அமைந்துள்ள தூண் பற்றிய தகவலைத் தந்து உதவுமாறு கேட்டு மனு ஒன்றை கடந்த 18.01.2022 அன்று பதிவு அஞ்சலில் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கீழ்காணும்

• தகவல் 1: GTஸ்டேசன் எந்த ஆண்டு நிறுவப்பட்டது

• தகவல் 2: எத்தனை GTஸ்டேசன் உள்ளன.

• தகவல் 3: GT ஸ்டேசன் மலை உச்சியில் அமைந்துள்ள மேற்படி இடத்தின் மேப் நகல் வழங்க வேண்டும்

மூன்று தகவலை அளிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்.

2. திரு. அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய மனுவிற்கு ஒன்றிய அரசின் ஜியோ ஸ்பாட்டியல் (Geo – Spatial) தகவல் மையத்தின் (TNP & ANI GDC, Chennai) இயக்குனரகத்தில் இருந்து 24.02.2022 அன்று பதில் பெறப்படுகிறது. அம்மையத்தின் அலுவலக சர்வேயர் மற்றும் ஒன்றிய பொது தகவல் அலுவலர் (CPIO) திரு P. பழனிமுத்து அவர்கள் மனுதாராகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கேட்ட தகவல் எங்கள் அலுவலகத்தில் இல்லை. காரணம் 2015 ஆம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல ஆவணங்கள் அழிந்து போயின. எனவே மனுதாரர் கேட்ட தகவலை உத்திரகாண்ட மாநிலம் டெஹ்ராடுன்-ல் அமைந்துள்ள (Geodetic & Research Branch Survey of India) ஒன்றிய நிலகணிப்பியல் துறைக்கு அனுப்பி பெற்றுத் தருகிறோம் என முதல் பதில் கடிதத்தை அனுப்புகிறார்.

ஒன்றிய அரசின் ஜியோ ஸ்பாட்டியல் (Geo – Spatial) தகவல் மையத்தின் (TNP & ANI GDC, Chennai) அலுவலக சர்வேயர் மற்றும் ஒன்றிய பொது தகவல் அலுவலர் (CPIO) திரு P. பழனிமுத்து அவர்கள் இரண்டாவது பதில் கடிதத்தை 21.03.2022 அன்று அனுப்புகிறார். அக்கடிதத்தில் (பார்க்க படம் 1)

A. ஆவணங்களில் உள்ளதுபடி GT ஸ்டேஷன் (Hill Station) 1808-09 மற்றும் 1871 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

B. ஆவணங்களில் உள்ளதுபடி இரண்டு GT ஸ்டேஷன் (Hill Station) இருக்கிறது.

3. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ் மோடி அரசு வழங்கிய 2022 ஆம் ஆண்டு தகவலின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே Geometrical trigonometry Station (GT Station) என்று அழைக்கப்படுகிற இரண்டு நில அளவை தூண் கற்கள் சுமார் 216 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியாகிறது.

4. மேற்கண்ட இரண்டு நில அளவை கல்லில் ஒரு கல் சிதைந்துள்ளது. ஒன்று நல்ல நிலையில் உள்ளது. (பார்க்க படம் 2&3)

நல்ல நிலையில் உள்ள நில அளவை கல்லில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென மதவாத சக்திகள் மல்லுக்கட்டுகின்றன. அவை இரண்டும் நில அளவை கற்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிதைந்த நில அளவைக்கல் இருந்த இடத்தில் பாறையின் மீது வட்டமிட்டு நடுவில் ஒரு புள்ளி வைக்கப்பட்ட குறியீடு காணப்படுகிறது. அதற்கு ஆதாரமான புகைப்படத்தை இந்த மனுவில் இணைத்துள்ளோம். (பார்க்க படம் 4)

தீபத்தூண் அல்ல சர்வே கல் என்பதற்கு மற்றொரு ஆதாரம்:

—————–

5. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே கல் என்பதற்கு கீழ்கண்ட கூடுதல் ஆதாரங்களை இணைத்துள்ளோம்.

1899 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட The Great Trigonometrical Survey of India, Volume XXIX நூலில் திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது நில அளவை கற்கள் என்பதை உறுதி செய்கிறது. இந்த நூலின் நகல் சமூக வலைத்தளத்தில் இணைய (Digital Copy) நகல் வடிவில் கிடைக்கிறது. (பார்க்க படம் 5) அதில் பக்கம் 298இல் (Pdf Pg no 361) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒருபகுதி சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தொலைவுகளை Yardsஇல் குறிப்பிட்டுள்ளனர். Yards என்றால் கெஜம் என்று நாம் அழைக்கிறோம். 1 கெஜம் (Yards) என்றால் 3 அடி (Foot) ஆகும். ஆக சிக்கந்தர் தர்காவுக்கு வட மேற்கில் 150 அடி (50 Yards) தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 159 அடி (53 Yards) தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில் மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது. இந்த நூலின் முகப்பு படத்தின் நகலையும், அந்நூலின் 298 பக்கத்தின் நகலையும் இந்த மனுவோடு இணைத்துள்ளோம்.

சிக்கந்தர் தர்கா அருகே மலையுச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் 163 ஆண்டுகளாக இல்லை:

———————————-

6. சார்பு நீதிமன்ற நீதிபதி ராம அய்யர் அவர்கள் 1923ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் – (பக்கம் 71-72) ”1862இலும், 1912லும் மலைஉச்சியில் தர்கா அமைந்துள்ள இடத்தில் தீபம் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு தர்கா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவ்விடத்தில் தீபம் ஏற்றுவதற்கு மேஜிஸ்ட்ரேட்கள் (அன்றைய நீதிபதிகள்) மறுத்துவிட்டனர். அதற்கு மூன்று காரணங்களை மேஜிஸ்ட்ரேட்கள் பட்டியலிடுகின்றனர். (பார்க்க படம் 6 & 7)

1. இதற்கு முன்பு அங்கே தீபம் ஏற்றுகிற வழக்கம் இருந்ததில்லை.

2. மேலும் அங்கு தீபம் ஏற்றுகிற முயற்சி மக்களிடையே நிலவும் அமைதியை சீர்குலைக்கும்.

3. தர்கா அருகே தீபம் ஏற்றுவதை மறுப்பதற்கு முக்கிய காரணம் மலையின் உச்சி பகுதி இசுலாமியர்களின் உரிமையாக இருந்தது.

இதில் இருந்து 1862 முதல் 2025 வரை சுமார் 163 ஆண்டுகள் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள மலையுச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

இது சர்வே கல் என்றால் எது தீபத்தூண்?:

————————————

7. அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மலையின் வடக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி 8 ஆம் நூற்றாண்டில் மலையினை குடைந்து சிவனுக்காக எடுக்கப்பட்ட ஒரு வடக்கு நோக்கிய குடைவரை கோயிலாகும். முற்கால பாண்டியர்கள், பிற்கால பாண்டியர்கள், நாயக்கர்கள் என பல அரச மரபினர் இக்கோயிலுக்கு திருப்பணிகளை செய்துள்ளனர். நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன. குடைவரை கோயிலாக இருந்த திருப்பரங்குன்றம் கோயிலை கட்டட கோயிலாக எழுப்பியவர்கள் நாயக்கர்கள்தான். திருப்பரங்குன்றம் கோயிலின் மண்டபங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தவை. திருப்பரங்குன்றம் கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழா திருவிழா நாயக்க அரசர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தெய்வானை திருக்கல்யாணம் புராணப்படி ஐப்பசி மாத சூரசம்காரத்திற்குப் பிறகு நடப்பது தான் வழக்கம். திருமலைநாயக்கர் தெய்வயானை திருக்கலியாணத்தைப் பங்குனி மாதத்திற்கும், மீனாட்சி திருக்கலியாணத்தைச் சித்திரை மாதத்திற்கும், தேனூர் செல்லும் அழகரை மதுரை வரும்படியாகவும் மாற்றினார். அவ்வாறு நாயக்கர் காலத்தில் கோயிலின் நேரே மலையுச்சியில் ஒரு தீபத்தூண் வைக்கப்பட்டுள்ளது. அந்த தீபத்தூண் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது.

உச்சி பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது?

—————————————

8. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை நேரில் பார்த்த அனைவரும் கோபுரத்தின் மேலே மலை உச்சியில் இரண்டு மண்டபங்கள் இருப்பதை பார்த்து இருப்பார்கள். அதில் ஓம் என்ற பலகை இருக்கிற மண்டபம் தான் உச்சி பிள்ளையார் கோயில். (பார்க்க படம் 8 ) அதன் அருகே இடது பக்கம் இருக்கிற இன்னொரு மண்டபத்தில்தான் நாயக்கர் கால கல்வெட்டுடன் இருக்கிற தீபத்தூண் இருக்கிறது. (பார்க்க படம் 9)

அந்த தீபத்தூணில் மக்கள் தீபம் போடுகிறார்கள். உச்சிப்பிள்ளையார் கோயிலில் அருகே இருப்பதுதான் நாயக்கர் காலத்து தீபத்தூண். அந்த தீபம் தூண் உள்ள மண்டபத்தின் மேலே எண்ணெய் கொப்பரைகள் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

9. அந்த தீபத்தூண்தான் நாயக்கர் கால கல்வெட்டு அடங்கிய தீபத்தூண். கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக் கொண்டு முகத்தை இடது பக்கம் திருப்பி கொண்டு இருப்பதாக சிற்பம் அமைந்துள்ளது. (பார்க்க படம் 10)

அந்த கல்வெட்டில் இது ஆண்டவன் சிர (தலை) மலை உச்சியில் உள்ள தீபத்தூண். இங்கே புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் எனக் கூறுகிறது. இதனை கல்வெட்டாய்வாளர் போசு அவர்கள் எழுதிய 1981இல் தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்ட திருப்பரங்குன்றம் நூல்: பக்கம் 129 லும், திருப்பதி தேவஸ்தானம் நிதியுதவி பெற்ற நாகப்பா நாச்சியப்பன் என்பவரின் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வேடு 1989 ஆம் ஆண்டு வேற்கோட்டம் என்ற நூலக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் 188 ஆம் பக்கத்தில் இதே விபரம் உள்ளது. (பார்க்க படம் 11)

தர்கா அருகே இருப்பது தீபத்தூண் என்றால், அந்த தூணில் உள்ள நாயக்கர் கால கல்வெட்டும், அனுமார் சிற்பமும் எங்கே? கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபம் ஏற்றுகிற உச்சிபிள்ளையார் கோயில் மண்டபத்தின் உள்ளே தீபத்தூணில் அனுமார் சிலையும் கல்வெட்டும் காணப்படுகிறது. தர்கா அருகே இருப்பது இரண்டும் நில அளவை கற்கள்தான் என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலும், ஆங்கிலேயர் கால ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன.

திருப்பரங்குன்றம் மலை நில அளவை கற்கள் பாதுகாக்கபட வேண்டும்:

——————————–

10. இந்த வரலாற்று பின்னணியில் இருந்து பார்க்கிற போதும், கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயில் மேலே மலையில் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருப்பது தீபத்தூண் என்பதும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது 216 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்கள் கால நில அளவை கற்தூண்கள் என்பதும் புலப்படுகிறது. நில அளவை கற்களை தீபத்தூண் என்று அவதூறான பிரச்சாரத்தை மதவாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. இதனால் 216 ஆண்டுகள் பழமையான நில அளவை கற்கள் சேதப்படுத்தபடும் ஆபத்து உள்ளது. எனவே வரலாற்று & தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நில அளவை கற்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்.

Tamil Nadu Survey and Boundaries Act, 1923 இன் படி

A. நில அளவை கற்களை நிலத்தின் உரிமையாளர்கள், குத்தகைதார்கள் தான் பராமரிக்க வேண்டும்.

B. நில அளவை கற்களை பொது பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.

C. நில அளவை கற்களை எந்த விதத்திலும் சேதப்படுத்தவோ, இடம் மாற்றவோ செய்யக் கூடாது.

D. நில அளவை கற்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

E. நில அளவை கற்களில் சேதம், மாற்றம் ஏதேனும் கண்டறியபட்டால், உடனே அது குறித்த புகாரை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

F. நில அளவை கற்களில் சேதம், மாற்றம் இருப்பது தொடர்பான புகார் பெறப்பட்டால், அதனை ஆய்வு செய்து அதன் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

G. நில அளவை கற்களை சேதப்படுத்தினால், மாற்றம் செய்தால் அது இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code, 1860, specifically Section 434, under new code section 326) படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(முருகன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில், சிக்கந்தர் தர்கா, நில அளவை தூண் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அரசின் ஆவணத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வரைபடம் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க படம் 12.)

தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க கோரிக்கை:

———————

11. இந்தியாவில் புவியில், நிலவியல் வரைபடங்கள் உருவான வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற வரலாற்று நினைவு சின்னங்களாக விளங்குகின்ற திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள பழமையான இரண்டு நில அளவை கற்களை தமிழ்நாடு அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும், இந்திய, தமிழ்நாடு தொல்லியல்துறையும் பாதுகாக்க வேண்டும்

i. சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள 216 ஆண்டுகள் பழமையை வாய்ந்த நில அளவை கற்தூண்களை (Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (TN Act 25 of 1966), மற்றும் Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958) தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் வரலாற்று சின்னங்களாக அறிவித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ii. புவியியல், நிலவியல் அதன் அறிவியல் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளவும், இந்திய புவியியல் வரைபடங்கள், எல்லைகள் வகுப்பட்ட வரலாறு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

iii. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இத்தகவலின் நகலை இந்த மனுவோடு இணைத்துள்ளோம். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தொடர்பாக நடைபெறும் அனைத்து வழக்குகளிலும் இந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

iv. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவை கற்களை அனைவரும் பாதுகாக்கும் வண்ணம் நில அளவைகற்தூண்களுக்கு மதநல்லிணக்க ஆளுமைகள் ஆசான் திருவள்ளுவர் & கர்னல் பென்னி குயிக் பெயர்களை சூட்ட வேண்டும்.

v. அவ்விடத்திலேயே நில அளவை கல் என்றால் என்ன, இதன் வரலாறு உள்ளிட்டவைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அங்கேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகை ஒன்றை வைக்க வேண்டும்.

இப்படிக்கு,

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *