தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை எப்போது ? முதல்வர் அவர்களே!

தமிழ்நாட்டில் நடந்த அரச வன்முறைகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரங்கேறிய துப்பாக்கிச்சூடு மிகக் கொடூரமானது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியும் மண்ணையும் காற்றையும் நச்சாக்கிய உலகமறிந்த ஒரு குற்றவாளி நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய மக்களை ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தோடு கூட்டணி சேர்ந்து ஒன்றிய பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அரசுகள் வேட்டையாடின.

14 பேர் கொடூரமாக காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளால் பொசுக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் தாக்குதலுக்கு ஆளாகினர்.

பிரிட்டீசுக்கு சொந்தமான பின்னி ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தூத்துக்குடி மற்றொரு முறை அதே பிரிட்டீசின் தலைநகர் இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்காக கலவரக் காடாக மாற்றப்பட்டது.

இந்தப் படுகொலையின் இரத்த சாட்சியமாக பல்வேறு மாந்த உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்களின் , ப்ரண்ட் லைன் , நியூஸ்மினிட் , ராய்டர்ஸ் போன்ற சனநாயக ஊடகங்களின் செய்திகள் என தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்காக நடத்தப்பட்ட படுகொலைக்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட வன்முறை எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் , டிஐஜி கபில்குமார் சிர்கார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்நிலைக் காவலர்கள் வரை நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை வெளியிடப்பட்டு ஆண்டுகளாகி விட்டது.
இதுவரை துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் காப்பு போராட்ட வரலாற்றில் உலகையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை தொடர்பாக தமிழ்நாடு அரசு கள்ள அமைதி காக்கிறது.

எதிர்கட்சியாக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டையுடன் வந்தார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையிலே தள்ளுவோம்” என 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன் தமிழ் இந்து நாளிதழுக்கு நேர்காணல் வழங்கினார்.

அது தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, அரசு அமைத்த விசாரணை ஆணையமே குற்றவாளிகளை பட்டியலிட்டு அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால் அவை மீது நடவடிக்கை என்ன என்பது தான் கேள்வியாக எழுகிறது.

தேர்தல்கள் வரும் போகும் ஆட்சிகளும் பதவிகளும் மாறும் இது சனநாயக ஊழிக் காலம் மக்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதும் துப்பாக்கிச் சூட்டில் பலியான மக்களுக்கு நீதி வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசினுடைய கடமை என்பதை மறக்க வேண்டாம்.

சட்டத்தின் ஆட்சியையும் சனநாயகத்தையும் நிலைநாட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றிய உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்!

அதேபோல எந்த ஆலையின் சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராகப் போராடினார்களோ அந்த ஸ்டெர்லைட் ஆலையை இடித்துத் தரைமட்டாக்க சிறப்புச் சட்டத்தையும் உடனடியாக இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின் மண்ணையும் , மக்களையும் காக்க உயிர்நீத்த மாவீரர்களை நினைவுபடுத்தி முத்துநகரில் நினைவிடம் அமைத்திடக் கோருகிறோம்!

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *