நாயக்கர் பட்டி டங்ஸ்டன் தொகுப்பு ஏலம் ரத்து மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்களில் டங்ஸ்டன் கனிமம் வெட்டி எடுப்பதற்காக தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திற்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒன்றிய அரசு ஏலத்தின் மூலமாக அனுமதி வழங்கி இருந்தது. அப்படி வழங்கப்பட்டதும் இந்த பகுதி மக்களிடம் இருந்து மிகப் பெரும் எதிர்ப்பு உருவாகி அது வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களை நடத்தியது. ஒன்றிய அரசு இடத்தை மறு ஆய்வு செய்வதாக ஒரு அறிவிப்பை விடுத்ததும், மக்கள் அதை ஏற்க தயாராக இல்லாமல் தொடர்ந்து போராடி வந்தார்கள். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம், கிராம மக்கள், மக்கள் இயக்கங்கள் அனைவரும் இணைந்து நாசக்கார டங்ஸ்டன் திட்டம் வருவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. எங்கள் மண்ணை, மலையை, நீரை நிலத்தை, உயிரை, எங்கள் சந்ததியினரின் சுகாதாரத்தை, தூய காற்றை இழந்து, பெறுகின்ற எந்த ஒரு பொருளாதார ஈட்டலையும் நாங்கள் ஏற்க முடியாது என்பதில் உறுதியுடன் இருந்தனர். உறுதியாக தீரமிக்க போராட்டத்தை மக்கள் நடத்தி வந்தார்கள். மக்களின் ஒன்றுபட்ட இந்த போராட்டத்தின் விளைவாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து இருப்பதாக இன்று அறிவித்திருப்பதை டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது. அதே வேளையில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுப்பை விட்டு விட்டு தமிழகத்தில் பிற பகுதிகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித முன் முயற்சியிலும் ஒன்றிய அரசு ஈடுபடகூடாது என்பது எங்களின் கோரிக்கையாகவும் இந்நேரத்தில் முன்வைக்கின்றோம். இந்தப் போராட்டத்தில் முன்னின்று நடத்திய அனைத்து மக்களுக்கும், இரவு – பகல் பாராமல் அனைத்து நேரத்திலும் போராட்ட செய்திகளை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்ற அனைத்து அச்சு, காட்சி மற்றும் வலைக்காட்சி ஊடக நண்பர்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஒன்றிய – மாநில அரசுகள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Leave a Reply