வாய்மை

ஒலிவாங்கிகள்
எப்போதும்
ஏங்கியபடியே
தலை தாழ்ந்து உதட்டருகே
நிலையாய் நிற்கின்றன
ஒரு நல்ல உரைக்காக

வருவோர்
போவோர் யாவரும்
தங்கள் கற்பனைத்திறத்தை
கடைவிரித்து செல்கின்றனர்
ஒருவரும் உண்மை சொல்வாரில்லை

ஒலிபெருக்கிகள்
அலறியபடி
அழுது அரற்றுகின்றன
எத்தனைப் பொய்களைத்தான்
ஒலிபரப்புவேன் என்று
சில நேரம் தகராறும் செய்கின்றன

பொய்களை சகிக்காத
ஒலிவாங்கிகள்
அவ்வப்போது
அடிவாங்கி
மிதி வாங்குகின்றன
உண்மையற்றவரைப்போட்டு யாரும் உதைத்தாரில்லை

ஆவென்று
வாய் பிளந்து
எதிர் நிற்கும்
மக்கள் காதுகள் வழியே
புழுக்கள்தான் வெளியேறுகின்றன

வானளவு பொய்களை
வண்ணமிகு மனிதர்கள்
ஆற்றி முடிக்கையில்
சாயம் கரைந்தோடுகிறது

மன்றத்திலேறும்
புழுதிபடும் உரைகள்
எக்காலமும் நிற்பதில்லை
நிச்சயம் கறைகள்தான்

எந்த மனிதரிடத்தும்
உண்மை வராமல்
ஒலிவாங்கியும்
ஒலிபெருக்கியும்
இறுதியில்
தற்கொ.லை
முயற்சியில் ஈடுபடுவதாக
தகவல்கள் வருகின்றன.

ஆகவே
பொய்கள் பேசுங்கள்
புரை தீர்த்த வாய்மை
இருக்கும் படி

செ. தமிழ்ராஜ்
மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *