‘தங்கலான்’
வரலாறும் புனைவும் கலந்த ஒரு திரைப்படம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு குறித்த பார்வை கொண்டவர்களால் தங்கலானை தமதாக இனங்காண முடியும்.
தொல்குடிகள் வளர்ந்து சாதிகளாக ஆனதன் தொடர்ச்சியாக உருவான வகுப்புச் சமூகம் இந்திய நிலையில் சாதிகளாக மாறி உடைமையைப் பொறுத்து மேல் கீழாக உருவான வருண சமூகத்திற்கு எதிரான
போராட்ட வரலாறாகவே அமைந்துள்ளது.
பொன்னும் அதனைக் கண்டெடுக்க முயலும் காலனிய பேரவாவும் ஏற்கனவே உடைமைப் பறிக்கப்பட்ட சமூகக் குழுவினரை அதிகாரப்படுத்தவில்லை. புதுமையும் பழமையும் சேர்ந்த அண்மைக்கால சமூக வரலாறு ஒடுக்குண்ட மக்களுக்கு விடுதலை தரவில்லை.
நிலத்தை , பொன்னை அடைகாக்கும் புனைவு வழியிலான ஆதிப் பொதுவுடைமை எனும் தொல் சமூக வாழ்வுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வளங்களைப் பகிர்ந்துகொள்ளக் கோரும் சமகால பொதுவுடைமையுடன் இணைய வேண்டிய அசலான இலட்சிய நோக்குக் கொண்டதாய் தங்கலான் திரைப்படம் அமைந்திருக்கிறது.
இயக்குநர் பா. இரஞ்சித்தின் திரைக்கலை உள்ளடக்கத்துக்கும் அது கோரும் சமத்துவ சனநாயக உள்ளடக்கத்திற்கும் அவருடைய நடைமுறை அரசியல் கோரிக்கைக்கும் இடையில் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு என்பதை திரைப்படம் அதை உருவாக்கிய படைப்பாளி என்ற முறையில் பேச வேண்டியிருக்கிறது. இயக்குநர் பா. இரஞ்சித்தின் அரசியல் சுரண்டப்படுவோர் ஓரணியில் சேர வேண்டிய தேவையை விட அது தனித்தொதுங்குதலையும் தன் சமகாலத்தில் சமத்துவ இலட்சியங்களை முன்னெடுக்கும் கோட்பாடுகளை ஏளனம் செய்வதாகவும் இருந்து வருகிறது.
தங்கலான் திரைப்படத்தைப் பொறுத்தவரை அது சமத்துவத்திற்கான காலனிய- பார்ப்பனிய எதிர்ப்பு எனும் புதிய சமத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தும் திரைப்படம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பேய் – பிசாசு போன்ற தொன்மங்கள் கனிம வளங்கள் தொடர்பாக மக்களிடையே கட்டமைக்கப்பட்டுள்ள பழைய நம்பிக்கைகள் தொடர்பானவையேயாகும்.
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours