புரட்சி என்பது புதுமைக்கூத்து!
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்!
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்!
புரட்சி என்பது போரிற் பெரிது!
புரட்சி என்பது புதுமைக் கீதம்!
புரட்சி என்பது புத்துயிர் முரசு!
புரட்சி என்பது பொறுமைக் குறுதி!
புரட்சி என்பது போம்பணிக் கறுதி!
புரட்சி என்பது பூகம்ப வேகம்!
புரட்சி என்பது பூரண மாற்றம்!
புரட்சி என்பது புரட்டின் வைரி!
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு!
என ஆவேசக் குரலெடுத்து பாடியவர் ஜீவா.
குமரியின் பூதப்பாண்டியில் பிறந்தவர்.பெற்றோரால் சொரிமுத்து என்று பெயரிடப்பட்டு,முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில்,கடவுளை வேண்டி மூக்குகுத்தி மூக்காண்டி என அழைத்தனர்.
வைக்கம் போராட்டம் தான் அவரின் முதல் போராட்டப் பங்கேற்பு. மனநோயாளிகளின் பூமி என்று சுவாமி விவேகானந்தரால் கூறுமளவிற்கு சாதியத்தின் கொடிய வாசனை வீசிய அன்றைய கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியில் தீண்டாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ஒரு மனிதனின் வளர்ச்சியில் சுற்றும்,சூழலும் சமூக அமைப்பும் அங்கம் வகிக்கிறது.பள்ளியில் படிக்கும்போதே சாதிகள் இல்லையடி பாப்பா! குல தாழ்ச்சி இகழ்ச்சி சொலல் பாவம்” எனப் பாரதியைப் படித்தார்..தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் கரம் பற்றி நடந்தார்.
“வாயற்ற நாயும்,,கழுதையும் மலந்தின்னும் பன்றியும் செல்லலாமாம். மனிதர் நாம் சென்றால் புனிதம் கெட்டு தீட்டு வந்து உலகம் முழுகிப்போய்விடுமாம்” என ஆவேசமாய் பேசியது மட்டுமல்ல,செயலிலும் இறங்கியவர்.
பள்ளியில் படிக்கும்போதே வைக்கத்தில் பெரியாரின் போராட்டத்தில் முதலில் கால்வைத்தார்.படிப்பு நின்று போனது.சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குள் ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவரை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தார்.
உயர்சாதி வெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டார்.காந்தியத்தின் தீண்டாமைக்கு எதிரான தத்துவத்தின் பால் சற்றும் மனம் தளரவில்லை. தீண்டாமைக்கு எதிரான அவரின் தொடர் நடவடிக்கை தொடர்ந்தது.வீட்டைவிட்டு வெளியேறும் நிலையும் வந்தது.
காந்தியத்தின் மீதுள்ள பற்று நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி குருகுலத்தில் வ.வே.சு ஐயரிடம் வந்து சேர்த்தது.ஆசிரமத்தில் ஆசிரியப் பணி சிறிதுகாலம் செய்தார்.எந்த தீண்டாமைக்கு எதிராகப் போராடினாரோ,அந்த தீண்டாமை குருகுலத்திலும் குடியிருந்தது.
தீண்டாமைக்கு எதிராகப் பெரியார், வரதராஜநாயுடு ஆகியோரோடு இணைந்து போராடினார்.முடிவில் அங்கிருந்து வெளியேறி காரைக்குடி சிராவயல் ஆசிரமத்திற்கு சிறகுகள் பறந்தன.காசிவிஸ்வநாத செட்டியாரின் காந்தி ஆசிரமத்தில் சொரிமுத்து என்ற மூக்காண்டி ஜீவானந்தமாக மாறுகிறார்.
மகாத்மாதான் இந்த தேசத்தை உய்விக்க வந்தவர்.அவரே கடவுள் எனக் கருதுகிறார்.அரிசன் இதழில் காந்தி எழுதிய கட்டுரை அவரை அதிர்ச்சி அடையச்செய்கிறது.சுதந்திர இந்தியா வர்ணாசிரம தர்மத்தின் படியே எதிர்காலத்தில் வழிநடக்கும் என்பதே அந்தக் கட்டுரை.
வர்ணாசிரமம் குறித்த காந்தியின் கருத்துகள் ஜீவாவை சிரமப்பட வைக்கிறது.வர்ணாசிரமத்தின் வக்கிரம் குறித்து காந்திக்கு கடிதம் எழுதுகிறார் ஜீவா.உங்கள் கடிதம் படித்தேன். வர்ணாசிரமம் குறித்த உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று காந்தி பதில் கடிதம் எழுதுகிறார்.
1927 இலங்கை செல்லும் வழியில் தமிழகம் வந்தார் காந்தி.காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்குகிறார்.நான் ஜீவாவை சந்திக்கவேண்டும் என்கிறார் காந்தி.அவரை அழைத்து வரவா என்று கேட்கிறார்கள்.இல்லை,நான் அவரைப் போய் நேரில் சந்திக்கவேண்டும் என்கிறார் காந்தி.காரைக்குடி சிறாவயல் ஆசிரமத்திற்கு காந்தி செல்கிறார். காந்தியே நேரடியாக வந்து ஜீவாவை சிறாவயலில் சந்திக்கிறார்.அப்போது ஜீவாவிற்கு வயது 20 தான்.
ஜீவாவிற்கும்-காந்திக்கும் விவாதம் நடக்கிறது.ஒரு மனிதனின் பிறப்பின் சிறப்பு வாழ்க்கை ஒழுக்கத்தில் தானே அன்றி, தர்மங்களுக்கும் குணங்களுக்கும் ஏற்ப மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்திருக்கிறேன் என கீதையில் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?என்று காந்தியிடம் கேள்வி எழுப்பினார் ஜீவா.
கீதையை வேதமாகக் கருதும் காந்தி, பிறப்பு குறித்த கீதையின் கருத்தை நான் ஏற்கிறேன் என்கிறார்.மகாத்மாவின் கருத்தை ஜீவாவால் ஜீரணிக்க முடியவில்லை.காந்தியத்தின் மீதான நம்பிக்கை தளர்கிறது. காந்தியத்திலிருந்து விடுபட்டு, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா.
சூர்யா சேவியர்

Leave a Reply