நான்கு மாநிலங்களுக்கும் ஒரு ஒன்றியப் பகுதிக்கும் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தமிழ்நாடு. பெரும்பாலான கட்சிகள் தங்களின் கணக்குகளையும், ஊடகங்கள் தங்களின் ஊகங்களையும், கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தங்களின் அறிக்கைகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கட்சிகளின் மறு ஆய்வுகள் ஆக்கப்பூர்வமான மாற்றுச் செயல்முறைகளை வகுப்பதற்கு இட்டுச் செல்லுமானால் மக்களுக்கு நல்லது.

மே 10 அன்று விஜய் அரசு பொறுப்பேற்றது. காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக கட்சிகள் அளித்த ஆதரவால் ஆட்சியமைக்க முடிந்தது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பின், அமைச்சரவை மே 21, 22 தேதிகளில் இரண்டு முறை விரிவுபடுத்தப்பட்டது. முதல் விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ். ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை), பி. விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை) அமைச்சர்களானார்கள். இரண்டாவது விரிவாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு (சமூகநீதித்துறை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ.எம். ஷாஜஹான் (சிறுபான்மையினர் நலத்துறை) பொறுப்பேற்றார்கள்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 59 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அமைச்சரவையில் பங்கேற்கிறது. கூட்டணி ஆட்சியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தை அக்கட்சியின் தேசியத் தலைவரோ மாநிலத் தலைவரோ வெளிப்படையாக முன்வைத்ததில்லை என்ற போதிலும் அடுத்த மட்டங்களிலான தலைவர்கள் தயக்கமின்றிப் பேசி வந்திருக்கிறார்கள்.
அதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்று ஒரு கொள்கையாகவே முழங்கி வந்திருக்கிறது. அதன் தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். சிலர் அதை வெறும் பதவி ஆசை என்று கொச்சைப்படுத்தினார்கள். ஆனால், தமிழ்ச் சமுதாயம் தலித் விடுதலை உள்ளிட்ட லட்சியங்களை நோக்கி நகரச் செய்வதில் அலுவல்பூர்வ அதிகாரம் ஒரு முக்கியத் தேவை என்ற நோக்கத்துடனேயே முன்வைக்கிறார் என்ற புரிதலோடு மற்றவர்கள் அதை ஆதரிக்கிறார்கள்.
கட்சியைத் தொடங்கியதில் இருந்து சுமார் கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலில், விசிக முதல் முறையாக அரசில் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறது. இயூமுலீ கட்சி ஏற்கனவே ஒன்றியத்திலும் கேரள மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களில் பங்கேற்றதுண்டு. தமிழகத்தில் இப்போதுதான் அமைச்சரவையில் நுழைந்திருக்கிறது.
கண்டனத்திற்குக் கண்டனம்

இந்த முடிவுகளை ஏற்கமாட்டாதவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கடுஞ்சொற்களால் விமர்சித்தார். அதை விசிக எதிர்த்தது மட்டுமல்லாமல், அந்த விமர்சனத்தில் பெண்ணை இழிவுபடுத்தும் சொல்லாடல்களுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு அத்தகைய கடுஞ்சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதோடு, வன்னி அரசுக்கும் ஷாஜஹானுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். ராசா தன் பதிவை நீக்கிவிட்டார் என்றாலும், அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற வலியுறுத்தலை மாதர் இயக்கம் பதிவேற்றியுள்ளது.
இத்தகைய பிரச்சினைகள் வரும்போதெல்லாம் யாராவது சமூகத்தில் ஊறிப்போன, தங்கள் மனதிலும் பதிந்துபோன, பெண் அவமதிப்புச் சொல்லாடல்களை வெளிப்படுத்தவே செய்கிறார்கள். மிகப்பெரிய இயக்கமாக வெடித்து இந்தச் சிறுமை சிதறடிக்கப்பட வேண்டும்.
கூட்டணி ஆட்சி
“கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” என்று கட்சியின் தொடக்க மாநாட்டில் விஜய் பேசியபோது, இரண்டு கேள்விகள் மேலெழுந்தன. யார் அவரோடு கூட்டணி அமைப்பார்கள்? தேர்தலில் வெற்றி பெற்ற பிறகல்லவா பார்க்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்குமே இப்போது பதில் கிடைத்துவிட்டது.
இனிமேல் தமிழ்நாட்டில், எந்தக் கட்சியின் தலைமையானாலும், இந்த ஏற்பாடு மாறாது என்று எதிர்பார்க்கத் தக்க வகையில் கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. அத்துடன், பதவி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அதிமுகவிலிருந்து வந்து ஆதரவளித்தவர்களின் நோக்கத்தை (சட்டச்சிக்கல்கள் ஒரு காரணம் என்றாலும், சில பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும்) விஜய் நிறைவேற்றவில்லை – அதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. கப்பலை நம்பி படகை இழந்த நிலையில் அதிமுகவின் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணியினர் நிற்கிறார்கள்.

ஒரு வகையில் கூட்டணி ஆட்சி நடப்பது நல்லதுதான். தேர்தலோடு முடிந்துவிடாமல் ஆட்சியிலும் கூட்டணி தொடர்வது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதானமான சமநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கவும் வழிவகுக்கும். ஒன்றியத்தில் இடதுசாரிகள் ஆதரவோடு நடந்த கூட்டணி ஆட்சிகளில்தான் கல்வி உரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இன்று ஒன்றிய பாஜக அரசு ஒரேயடியாகத் தன் அதிரடி அஜெண்டாக்களைச் செயல்படுத்த முடியாமல் கூட்டணிக் கட்சிகளால் கட்டுப்படுத்த முடியும், செய்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியும். கட்டுப்படுத்த முடிந்திருந்தால், நாட்டுப்பண்ணாக முன்னோடிகளால் தொலைநோக்குடன் தடுக்கப்பட்ட, மதச்சார்பு தோய்ந்த ‘வந்தே மாதரம்’ அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்காதல்லவா?
இடது முன்னணி முன்னுதாரணம்
சிறந்த கூட்டணி ஆட்சிக்கு மேற்கு வங்கம், திரிபுராவின் முன்னாள் இடது முன்னணி அரசுகளும் கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசுகளும் முன்னுதாரணம் உருவாக்கியிருக்கின்றன. மற்ற அரசுகளால் முறிக்க முடியாத முன்னுதாரணங்கள் அவை.
தமிழ்நாட்டில் இதற்கான குரல் ஒலிக்கத் தொடங்கியபோதே கூட்டணிகளின் இரண்டு பெரிய தலைமைக் கட்சிகள் – குறிப்பாக திமுக அந்தக் குரலுக்குச் செவிமடுத்திருக்க வேண்டும். ஒன்றியத்தில் (பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் தலைமையிலான) கூட்டணி ஆட்சிகளில் தனக்கான அவசியத்தை வலியுறுத்திப் பெற்ற திமுக, இங்கே அந்தக் கோரிக்கையை ஏற்று ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்க வேண்டும். வெறும் கௌரவத்திற்காக அதை புறக்கணித்தார்கள். இப்போது அந்தப் பெருமையை தவெக தட்டிக்கொண்டுவிட்டது.
காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, இயூமுலீ கட்சிகள், தவெக அரசுக்கு உடனடியாக ஆதரவளித்ததன் நோக்கம் வெளிப்படையானது. ஒரு விவாதத்தில் பங்கேற்ற “சமூக ஆர்வலர்” ஒருவர், “பாஜக பற்றிய அச்சத்தால்தான் இப்படி ஆதரவளிக்கிறார்கள்,” என்று கூறினார். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்று வள்ளுவர் கூறிச் சென்றிருப்பதை நான் நினைவுகூர்ந்து, “அந்த அச்சத்தில் நியாயம் இருக்கிறது” என்றேன்.
தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளும் அதை மறுக்கவில்லை. “தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற முகமூடியுடன் பாஜக தன் பிடியில் எடுத்துக்கொள்ளும் தொலைக்கட்டுப்பாட்டு ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆதரவு” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
வேறுபாடும் எதிர்பார்ப்பும்
இதில் விசிக, இயூமுலீ அமைச்சர்களிடமிருந்து கூடுதல் பொறுப்புணர்வும் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றன. விஜய் அரசில் ஏற்கனவே பட்டியல் சமூகங்களைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்தான். அது குறிப்பிடத்தக்க ஒரு வளர்ச்சிப் போக்குதான்.
ஆனால், கட்சி உறுப்பினர்களாக உள்ள தலித்துகள் என்ற முறையில் பொறுப்பேற்பதைக் காட்டிலும், தலித் விடுதலையை லட்சியமாகவே கொண்ட, அதற்கான கருத்தியல்களிலும் கொள்கைகளிலும் செயல்களிலும் தொடர்ச்சியாகத் தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளது விசிக.
ஆகவே அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவரே அமைச்சராகிறார் என்பதில், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளடங்கிய சமூகநீதி அமைச்சகம் கூடுதல் பரிமாணம் கொள்கிறது. அத்துடன், மக்களின் பொருளாதார வாய்ப்புகளைச் சூறையாடும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு எதிராகவும் விசிக களமாடி வந்திருக்கிறது.

தவெக தலைமையைப் பொறுத்தமட்டில் சாதிய வன்மம், கார்ப்பரேட்டிய வியூகம் ஆகியவற்றில் எதிர்மறையாகப் போகவில்லை என்றாலும், திட்டவட்டமான நிலைப்பாடுகளையும் மேற்கொண்டதில்லை. ஆகவே, அமைச்சரவையில் விசிக பங்கேற்பு மக்களின் ஒற்றுமையைத் துண்டாடும் ஆதிக்க மதவாத அரசியலுக்கும், மக்களின் வளங்களை வேட்டையாடும் கார்ப்பரேட் மய பொருளாதாரத்துக்கும் “செக்” வைப்பதற்கு உதவிகரமாக இருக்க முடியும். அதற்கான தேவை இருக்கிறது என்ற நிலையில், தவெக தலைமக்கு ஒரு வழிகாட்டலாகவும் அமையக்கூடும்.
அதே போன்றுதான், தவெக கட்சியின் இஸ்லாமிய பிரதிநிதிகளைக் காட்டிலும், அந்த மக்களின் உரிமைகளுக்காகவே செயல்பட்டு வந்திருக்கும் இயூமுலீ கட்சியைச் சேர்ந்தவரே அமைச்சராகியிருப்பதும், அவரிடம் சிறுபான்மை நலத்துறை ஒப்படைக்கப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
உறுதிபெற வேண்டிய அணுகுமுறை
விஜய் தனக்கான சிறப்பு ஆலோசகராக ஒரு ஜோதிடரை நியமித்தது, எதிர்ப்புக்கு மதிப்பளித்து விலக்கிக்கொண்டது, இருமொழிக் கொள்கையைத் தொடரும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருப்பது, நீட் தேர்விலிருந்து விலக்களிக்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியது, உயர் கல்வி அமைச்சர் அதை வழிமொழிந்தது, சட்டப் பேரவைக் கூட்டங்களும் மாநில அரசாங்க நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது … இன்ன பிற வரவேற்புக்குரிய நிகழ்வுகளைக் காண முடிகிறது.
ஆயினும், அரசின் மதச்சார்பின்மை மாண்பை உயர்த்திப் பிடிப்பது, கார்ப்பரேட்டியத் தாக்குதல்களில் மக்களுக்குக் கேடயமாய் அமைவது, தொழிலாளர்கள்–விவசாயிகள் உரிமைகளுக்காக நிற்பது இன்ன பிறவற்றில் உறுதி நிறை நிலைப்பாடுகளை தவெக தலைம வெளிப்படுத்தவில்லை. ஒன்றிய ஆட்சியிடமிருந்து நிதி உள்ளிட்ட பலவற்றைக் கோரிப் பெற வேண்டிய நிலை இருப்பதால் மோதலைத் தவிர்க்கும் அணுகுமுறையே இது என்று கூறப்படுகிறது.

ஆட்சியமைக்க அழைப்பதை ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநர் இழுத்தடித்ததைக் கூட இடதுசாரிகளும் மற்ற கட்சிகளும்தான் விமர்சித்தன, தவெகவினர் மௌனமே காத்தனர்.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சரவைப் பங்கேற்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் வாதிடப்படுகிறது. அந்த வாதம் மெய்யானால் சரி. ஆர்எஸ்எஸ்–பாஜக வளர்த்துவிட்ட பிள்ளைதான் விஜய் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அறிவித்தார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். ஆகவே, விஜய் செயல்பாடுகளில் தடம் மாறுவது புலப்படுமானால், அப்போது சங்கடத்திற்கு உள்ளாகக் கூடிய திருமாவளவன் எவ்வாறு எதிர்கொள்வார் என்று மக்களால் கவனிக்கப்படும்.
தனித்துவ மாண்புகளுக்காக
35 சதவீத வாக்காளர்களின் ஆதரவு, இளைய தலைமுறைகளின் அன்பு என்ற வலிமைகளோடு விஜய் அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது. மத நல்லிணக்கம், பெரியாரிய–அம்பேத்கரிய பண்பாட்டுச் சூழல், கம்யூனிஸ்ட்டுகளின் உழைப்பாலும் தியாகங்களாலும் கட்டப்பட்ட உழைப்பாளர் உரிமைகள், சமச் சீர்கல்வி, பெண் சுயமரியாதை, மொழி உரிமை, மாநிலத் தன்னாட்சி, ஒன்றியக் கூட்டாட்சி உள்ளிட்டவை தமிழ் மண்ணின் தனித்துவ மாண்புகள். அவற்றைப் பேணுவதிலும் முன்னேற்றத் தடங்களில் செலுத்துவதிலும் அக்கறை உள்ள குடிமக்கள், அறிவுத்தள செயல்பாட்டாளர்கள், பண்பாட்டுத்தள முனைப்பாளர்கள், அரசியல் கொள்கையாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டணி ஆட்சியின் பங்களிப்பைக் கூர்ந்து நோக்குவார்கள்.
தமிழக ஜனநாயகம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதன் குறியீடாக ஆட்சியில் பங்கு என்ற இந்த மாற்றம் அடையாளம் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அத்துடன், வெளியிலிருந்து ஆட்சிக்கு ஆதரவு என்ற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கண்காணிப்பும் கைகாட்டலும் அந்த நகர்வுக்கு ஒரு தலையாய துணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

அ. குமரரசன்
Leave a Reply