முள்ளிவாய்க்கால் போரில் இனக்கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சென்னைக் கடற்கரையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திடுவோம்!

சம உரிமை , தன்மானம் , தாயகம் , தன்னாட்சி இலட்சியங்களுக்காக 30 ஆண்டுகள் அரசியல் வழியிலும் 30 ஆண்டுகள் கருவியேந்திய வழியிலும் போராடி வந்த ஈழத் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் உலக நாடுகளின் துணையோடு இனக்கொலைக்கு ஆளாயினர்.

2009 ,மே -18 அன்று நடந்து முடிவடைந்த இறுதி இன அழிப்புப் போரில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டுச் சட்டங்கள் , விதிமுறைகள் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியை இனக்கொலை ( Genocide)
என வரையறுக்கின்றன.

1948 இல் ஐநாவால் உருவாக்கப்பட்ட இனக்கொலைத் தடுப்புச் சட்டம் , ரோம் சாசனம் ஆகியவற்றின் கீழ் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலத்தை இனக்கொலை என வரையறை செய்கின்றன.

டப்ளினில் நடந்த நிலையான மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை இனப்படுகொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐநா அமைத்த மூவர் குழுவும் இறுதிப் போரில் இலங்கை அரசு நடத்திய மாந்த உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

ஐநாவின் மாந்த உரிமை அவையம் இலங்கை அரசை இறுதிப் போரில் நடந்த அத்துமீறல்களை விசாரிக்க உள்ளக விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனப் பணித்தன.

உலக வல்லரசுகளின் அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றன.

போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளாகியும் இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சரண்டைந்த பத்தாயிரம் தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் ? என்பதற்கு இதுவரையும் இலங்கை அரசு பதிலளிக்கவில்லை.

தமிழ் மக்கள் கருவிப் போராட்டத்தை கைவிட்டால் அதிகாரப் பகிர்வு , சம உரிமை ஆகியவைத் தரப்படும் என்ற வாக்குறுதிகள் இன்றுவரை கானல்நீராகவே உள்ளன.
இலங்கையின் ஒற்றைத்துவ அரசியல் யாப்பு தமிழ் மக்களை சமத்துவ உரிமைகள் கொண்ட மக்களாகவே அங்கீகரிக்கவில்லை . அது மேலும்மேலும் ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உலகில் வாழும் தமிழர்களுக்கு தாய் வீடாக அறியப்படும் தமிழ்நாடு ஈழத்தமிழ் மக்கள் சமத்துவ , சனநாயக அடிப்படையில் வாழ உறுதிசெய்ய வேண்டிய கடமை அதற்குண்டு.

தமிழ் மக்களின் வாழ்வில் நடந்த ஒரு மாபெரும் இன அழிப்பிற்கான நீதியைப் பெறவும் , சமத்துவ உரிமைகள் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழ தன்னாலான பணியைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அண்மையில் இரண்டாம் உலகப் போரின் போது தாய்லாந்து சயாமுக்கும் ,பர்மாவுக்குமிடையில் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூறும் வகையில் நடுகல் ஒன்றை தமிழ் மரபுப்படி அமைக்க உதவிசெய்தது. அதுபோல ஈழத் தமிழ் மக்கள் நீதியும் , சமத்துவமும் பெரும் நோக்கில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் ஒன்றை தமிழ் மக்களின் தலைநகராக விளங்கும் சென்னைக் கடற்கரையில் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

அரசியல் மாறுபாடுகளைக் களைந்து தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் அத்தகைய அடையாளம் ஒன்று அமைய வேண்டியது கட்டாயம்.

அர்மீனியப் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்தியாவின் கொல்கத்தா நகர் உள்ளிட்ட உலகெங்கிலும்
நகரங்களில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளன.

அரசியல் கட்சியினர், மக்கள் இயக்கங்களின் தலைவர்கள் அவ்வாறான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும்.

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *