Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Cinema

Modha Rathri movie Review - A kumaresan

A

Arakalagam

September 21, 2026Updated September 21, 20261 min read1 views
Modha Rathri movie Review - A kumaresan

பெண் தன் வாழ்விணையைத் தானே தேர்வு செய்யும் உரிமையை சமூகம் கிள்ளி எறிந்து வருகிறது. அது ஆணாதிக்கம் சார்ந்ததுதான். ஆணாதிக்கத்தின் வெற்றி பெண்ணின் மூலமாகச் செயல்படுவதில் இருக்கிறது.

சாதியத்தின் பிடிமானம் இடைநிலைச் சாதியர் மூலம் செயல்பட வைத்ததில் இருக்கிறது.

இந்தச் சிந்தனைகளை, நேரடியாகப் பேசும் உரையாடல் எதுவும் இல்லாமலே, உணர்த்துகிறது இந்தப் படம். இந்தக் கருத்துகளை “சீரியஸ்” தொனியில் பேசியிருந்தால் கோபப்படுவார்கள். நகைச்சுவையாகச் சொல்வதால் சிரிக்கிறார்கள், நாமும் இப்படித்தானே இருக்கிறோம் என்று மன உறுத்தல் கொள்வார்கள். மாறுவதற்கான முதல் முக்கியமான அடிவைப்பு மன உறுத்தல்தான் – அதை ஏற்படுத்துவதிலும் இந்தப் படம் வெற்றி பெறுகிறது.

நகைச்சுவை தனிப் பாதையில் போகாமல் கதையோடும் கதை நிகழ்வுகளோடும் கலந்து வருகிறது. அதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பொதுவாக, காதல் புனிதமானது என உயர்த்திப் பிடிக்கிற வேலையைத்தான் பல திரைப்படங்களும் வேறு பல கலையாக்கங்களும் செய்து வருகின்றன. அப்படியெல்லாம் இல்லை என்று, அந்தப் புனித ஓடு உடைக்கப்படுகிறது – அதற்காக ஒரு சிறப்புப் பாராட்டு.

இயல்பான மனிதர்களையும் இயல்பான முகங்களையும் திரையில் பார்க்கிறபோது நம் சொந்தங்கள்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

நாயகி திருமண மேடையில் இசைக்குழுவினரின் அதிரடித் தாளத்திற்கேற்ப ஒரு குத்தாட்டம் போடுகிறாளே, உண்மையில் அது அவளது அடங்காத ஆதங்கத்தை அடக்கும் வெறியாட்டம். மாப்பிள்ளை வீட்டுக்காரன் அதை உற்சாக ஆட்டமென்று நினைத்து விசிலடித்து வரவேற்கிறான். இப்படித்தானே பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலே கடக்கிறது சமூகம்.

கடைசிக் காட்சியில் தன் குடும்பத்தாரின் எதிரே நின்று ஒரு வெறிக்கூச்சல் போடுகிறாளே, அது முந்தைய வெறியாட்டத்தோடு இணைகிறது.

தமிழ் சினிமாவில் அண்மைக் காலத்தில் “சுபம்” என்ற அறிவிப்போடு முடிகிற ஒரே படம் இதுதான் என்று நினைக்கிறேன். முன்பு படம் பார்க்க வருகிறவர்கள், கதை நிகழ்வுகளால் பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள் – அவர்கள் ஒரு சுகமான உணர்வோடு திரும்பிச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு “சுபம்” என்று போடுவார்கள். இப்போதும் அந்த எண்ணத்தோடு அனுப்பி வைக்கிற முயற்சிக்காகவும் பாராட்டுகள்.

வருங்கால இயக்குநர்களும் பிற கலைஞர்களும் கூடியிருக்கிற இந்த சபையில், இவர்களுக்கெல்லாம் இப்படியான மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபட முடியும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் – அதற்காக வாழ்த்துகள்.

–‘கூகை’ அமைப்பினர் ஞாயிறன்று (செப்டம்பர் 20) மாலை, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி, ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினர். அங்கே நான் பகிர்ந்த கருத்துகள் இவை. - A kumaresan (Senior Journalist)

Comments (...)

You must be logged in to leave a comment.

Support Independent Journalism

Help Us Tell the Stories That Matter

Arakalagam is powered by readers like you. Your support keeps our journalism free, independent, and accessible to all.