Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Cinema

டோரதி.. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ந்து, உண்மையறிந்து, வெட்கப்பட்டு, அந்த வாழ்வியலுக்குள்ளாக உறைந்து நின்ற ஒரு திரைப்படம்..

A

Arakalagam

October 5, 2026Updated October 5, 20261 min read0 views
டோரதி..  மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ந்து, உண்மையறிந்து, வெட்கப்பட்டு, அந்த வாழ்வியலுக்குள்ளாக உறைந்து நின்ற ஒரு திரைப்படம்..

வெளிவந்த நாட்களிலிருந்து ஆதரவும், எதிர்ப்புமாக வந்துகொண்டிருக்கும் பதிவுகளால் ஓரளவுக்கு கதையின் தன்மையை புரிந்துகொள்ள முடிந்தது, என்றாலும் மதுரைப் பயணத்தில் கூட பார்த்துவிட வேண்டாம், என்னுடன், எங்களுடன் அமர்ந்து தான் இந்த படத்தை பார்க்கவேண்டுமென எனது இரண்டு மகன்களின் வேண்டுகோளின்படி சனிக்கிழமை இரவு சென்னை திரும்பியதுமே காலை 9 மணிக்கெல்லாம் டொரதி படத்திற்கு மூன்று டிக்கெட்டை புக்செய்துவிட்டுவிட்டோம்

ஒரு திரைப்படத்திற்கான அதிகாலைப் பயணம், திரைப்படம் முடிந்து தோன்றிய மனநிலையில் இருந்த திருப்தி ஞாயிறு அழகானது, அர்த்தமானது. சில நேரங்களில் நாம செலவிட்ட நேரங்கள் நமக்கொரு திருப்தியை தரும். அதை மூன்றுபேருமே உணர்ந்தோம்..

image
image

குறிப்பாக சமீப காலங்களில் வெளிவந்து நான் வாய்ப்பிருந்து பார்த்த படங்களான, மண்ணாடி, DC, dorothi, முதல் ராத்திரி,இவை நான்குமே இயல்பான கமர்ஷியல் தமிழ் சினிமாவிலிருந்து ரொம்பவே விலகி உறவுகளை, மனிதர்களை, அவர்களின் உரிமைகளை, மனித உணர்வுகளைப் பேசுவதோடு மட்டுமல்ல, அதை பொட்டில் அடித்தாற்போற்போல சொல்லிவிட்ட கதைகளாக இருக்கின்றன..

சினிமாவால் பாதிக்கப்பட்ட தமிழக அரசியல் சூழலில், நாமெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்பிக்கையூட்டும் படைப்புகளாக இதுபோன்ற பல திரைப்படங்கள் வருவது ஆரோக்கியம்..

ஏனெனில் பொய்ப்புனைவுகளின் மேல் அரிதாரம் பூசுவது தான் சினிமா என்கிற மாயையை பல இயக்குனர்கள் அவரவருக்கான காலக்கட்டங்களில் உடைத்து எறிந்திருக்கிறார்கள்..

எல்லா உடைப்பையும் விட இதுவரை வேறு வேறு பிம்பங்களால் கட்டப்பட்ட மனிதர்களின் வலியை புறக்கணிப்பை, அவமானத்தை கண்முன் நிறுத்தி நம்மை மனசாட்சி கொண்ட மனிதர்களாக உணர வைத்திருக்கிறது டோரதி..

image
image

கதையை ஒரு அரைப்பாடி லாரி வைத்துத் துவங்கப்பட்ட காட்சியே இக்கதை களத்திற்கு மிகப் பொருந்துகிறது. இதைப் பற்றி யாரும் பேசினார்களா என தெரியவில்லை, ஏனெனில் பெரும்பாலும் லாரி ஓட்டும் டிரைவர்கள் தான் சமூகத்தின் மிக மிக கடைநிலையில் , எவ்விதப் பாதுகாப்பிற்கும் உத்திரவாதமில்லாத , தன்னுடலை கடைச்சரக்கை விட மிக மலிவாக விற்கும் பாலியல் தொழிலாளர்களை அதிகம் சந்திக்கிறார்கள்..

பெண்களை மிக கீழாக, தங்கள் உடமையாக , பாலியல் பண்டமாக நினைக்கிற ஆணாதிக்க மனம்கொண்ட ஆண்கள் நிறைந்த வீட்டில் ஒரு கடைக்குட்டியின் வாழ்வில் நடக்கும் பெரும்பயணத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எல்லா ஆண்மைத்தனத்தின் அகங்காரத்தையும் அடித்து நொருங்கச் செய்கிறார், வசனங்களால், காட்சிகளால்..

தன்னுடம் வாழ்ந்த மனைவியை, மகளின் காதலை கெளரவம் காரணமாக கிணற்றுக்கு காவு கொடுத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் வாழும் அந்த அப்பாவின் கதாபாத்திரம், இன்றக்கும் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் ஊருக்குள் சாதியை தக்கவைத்துக்கொண்டிருக்கும் " ஆண் " ஆதிக்கச் சாதியின் ஒட்டுமொத்தக் குறியீடு..

தன்னோடு வாழ்ந்து தனக்கு பிள்ளை பெற்றுக்கொடுத்தவளையே மதிக்கத்தெரியாத ஆம்பளைக்கும், அதே வீட்டில் திருநங்கையாக மாறியும் தன் உணர்வுகளை வெளிப்படுத்த தைரியமின்றி " ஆண்வேடத்திலேயே " இருப்பது , அதே வீட்டிற்கு தன் அண்ணன் கூட்டிவரும் கேரளப்பெண்ணிடம் தனது பெண்ணுணர்வை வெளிப்படுத்திக்கொள்ளும் கடைக்குட்டிப் பையனுக்குமாக நகர்கிறது கதை..

சிறுவயதிலிருந்து தன்னுடன் வளரும் நண்பனிடம் கூட சொல்ல பயப்படுகிற இடம்தான், மூன்றாம் பாலினம் பற்றி நமது சமூகம் நமக்குள் திணித்திருக்கும் கேவமான பிம்பத்தின் அடையாளம். தன் நண்பன் பெண்ணாக மாறிவிட்டான் எனத் தெரியும் நொடியில், அருவருப்பாக பார்க்கும் உயிருக்கு உயிரான நண்பனை எதிர்கொள்வது எவ்வளவு பெரிய சவால். அத்தனையும் சிறு நெருடல் இல்லாமல் காட்சியமைத்த விதம் தான் படத்தின் வெற்றி..

" நீ ஆம்பளடா, பொம்பளமாதிரி அழக்கூடாது.."

" ஏண்டா , மொம்பளதான் அழனும்னு எதும் எழுதி வச்சுருக்கா.."

" சீ, பொம்பளமாதிரி பாத்திரம் கழுவிட்டு, எந்திருச்சுவாடா.."

" ஏன் பொம்பளதான் பாத்திரம் கழுவனுமா, சாப்பிடத்தெரிஞ்சவனுக்கு, சாப்பிட்ட தட்டை கழுவத்தெரியுனும்ல.. "

இப்படியான " பொம்பளன்னா இப்டித்தான் இருக்கனும்னு சொன்ன, தமிழ்ச் சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, பெண்களும் , ஆண்களும் கூட கைதட்டுகிற வசனங்கள்..

தன் அம்மாவைப்போலவே அந்த வீட்டிற்குள் அடிவைத்திருந்த " டோரதி " பெண்ணை அடுத்துக் கொன்று தூக்கிலேற்றி வைத்திருக்கும் காட்சியில் அதிர்ந்துபோய்விட்டோம்.

தன் பிள்ளையை நண்பனை வைத்தே தீர்த்துக்கட்ட அனுப்பும் அப்பன்...

அந்த பயணத்தில் நண்பனைத் தொலைத்து ஒரு பெண்ணை தரிசிக்கும் காட்சியை நம் மனதில் ஒட்டவைப்பது காட்சிகள் மட்டுமல்ல. நமது இசைஞானி என்ற மேதையின் பிண்ணனி இசை தான்.. கதாபாத்திரங்கள் கதைக்கு உருவம் கொடுத்திருக்கிறது. இளையாஜாவின் இசை உருவத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது..

இதுவரை எண்களாலும், அவமானமான சொற்களாலும் அழைக்கப்பட்ட நம் வயிற்றில் பிறந்து, நம்மால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, வாழ வழிதெரியாமல், பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும் பிழைத்துக்கிடந்த மனிதர்களை எந்த பூச்சும் இன்றி அப்படியே காண்பித்திருக்கிறார், ஆனால் அவர்கள் பிறப்பால் பிழையல்ல, அவர்கள் நமது ஹார்மோன்களில் தவறி விழுந்த விதை , அதை பாதுகாக்கத் தவறியது நாமதான் என்கிற அறிவியலை சொல்லாமல் சொல்லிவிடுகிறாள் நாமதான்

படத்தை ஆதரிக்கும் எண்பது சதம் மனிதர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தங்களைக் கலாச்சாரக் காவலர்களாக நினைக்கும் இருபது சத ஆட்கள் கத்துகிறார்கள். அவ்வளவே..நல்ல மாற்றங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல கொள்கைகள், சத்தமில்லாமல் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும்..

உடன் வாழும் சக மனுசியையே காதலிக்கத்தெரியாத பல "ஆம்பளங்களுக்கு" ஆணிலிருந்து பெண்ணாக மாறுகிற உணர்வை புரிந்துகொள்வது கடினம் தான்.. பரிதாபத்தோடு கடந்துசெல்வோம்.

ப.மகாலட்சுமி.

Comments (...)

You must be logged in to leave a comment.

Support Independent Journalism

Help Us Tell the Stories That Matter

Arakalagam is powered by readers like you. Your support keeps our journalism free, independent, and accessible to all.