திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் – செ. தமிழ்ராஜ்

உலகம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் இறந்த மனித உயிரிழப்புகளுக்கு அடுத்ததாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளும், படுகொலைகளும், உயிரிழப்புகளும் ஏராளம் என்கிறது ஆய்வொன்று. அந்த வகையில் இந்தியாவில் மத உணர்வை ஊதிப் பெரிதாக்கி, ஆட்சிப் பீடத்தை கால் நூற்றாண்டு காலமாக கைப்பற்றி, நாட்டை ஒரு பாசிச வழியில் நடத்தி வருகிறார்கள் காவிப் பரிவாரங்கள். ஏனெனில் மதவெறியும், மத உணர்வும் மிகவும் ஆபத்தானவை.எளிதில் தீப்பற்றிக் கொள்பவை.

சங்பரிவாரங்கள் காந்தியை சுட்டுக் கொன்றதிலிருந்து தங்கள் கணக்கை துவக்கினார்கள். தேசப்பிதாவை கொன்றுவிட்டு தங்கள் பிள்ளையார் சுழியை இட்ட அமைப்பான ஆர் எஸ் எஸ் பல்வேறு இயக்க முகமூடிகளை மாட்டிக் கொண்டு தேசமெங்கும் உலாவருகிறது. பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், கோத்ரா ரெயில் எரிப்பு, குஜராத் கலவரம் எனப் பெரும் பெரும் கலவரங்களின் மூலமாகவும், கொலைகளின் வழியாகவும், ஒட்டு மொத்த இந்தியாவையும் சுற்றி வளைத்தார்கள்.

இன்று ஏகபோக இந்தியாவில், தென்னாட்டைத் தவிர்த்து, வடநாடு முழுவதும் காவி நிறத்தை அடர்த்தியாக படர்த்தியிருக்கிறார்கள். அவர்களின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் தீபப்பிரச்சனையை கையில் எடுத்து முழுக்க முழுக்க பொய்களால் ஊதத் துவங்கி இருக்கிறார்கள். 1920 களில் கனறத் துவங்கிய சிறு பொறியை, மீண்டும் பாபர் மசூதி இடிப்பிற்கு பின் 1990 களில் பெரு நெருப்பாக மாற்றத் துவங்கி, இன்று அதன் பிரச்சனையை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். காவியர்கள் முதலில் ஒரு பொய்யை சொல்லுகிறார்கள். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள். உண்மையே மதி மயங்கி திகைத்துப் போய் நிற்கும் அளவு, புனைவால் உருவம் செய்து மக்கள் நினைவுகளில் நிலை நிறுத்துகிறார்கள். காவியர்கள் காலங்காலமாக கடைபிடிக்கும் நரித்தந்திரமிது.

திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் என்று, வழக்கறிஞர் வாஞ்சிநாதனால் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது, பிரச்சனைகள், ஆதாரங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், உள்ளூர் மக்களின் மனநிலைகள், சங்கிகளின் வதந்திகள் என யாவற்றையும் ஆதாரங்களுடன் பேசுகிறது. வழக்கறிஞர் அல்லவா ஒவ்வொரு வரியையும், நீதிமன்றத்தில் வைக்கும் வாதங்களைப் போல எழுதிதிருக்கிறார். தீபப்பிரச்சனையில் நீண்ட காலமாக, தனி நபராக நின்று, களப் போராளியாக தன் எதிர்ப்பை பதிவு செய்து, சகோதர இயக்கங்களை இணைத்துக் கொண்டு, மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மனித அறத்தோடு இன்றளவும் போராடி வருகிறார்.

சமகாலத்தில் திருப்பரங்குன்றம் குறித்தான புத்தகங்களில், வாசித்தவன் என்ற வகையில் சொல்லுகிறேன். அரிய தகவல்களுடன் ஒரு போர்வீரனைப் போல முனைமுகத்து நிற்கிறது. இந்தப் புத்தகத்தை எந்தச் சபையில் எடுத்துச் சென்றாலும், மானுடத்தின் சாட்சியமாக நின்று பேசும். அந்த அளவு அடர்த்தியான தகவல்கள், ஒரு களப் போராளியால் மட்டுமே இந்த அளவு விபரங்களை உணர்வுப்பூர்வமாக சேகரிக்க முடியும்.

மொத்தம் 26 அத்தியாயங்களில், 372 பக்கங்களில் ஆதி அந்தம் வரை விரிவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். 122 பக்கத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை அப்படியே பதிப்பித்திருக்கிறார். காவி உதடுகளில் ஊதிப் பெருக்கப்பட்ட பொய்யின் ஸ்தூல வடிவத்தை, ஆதாரத்தோடு சரித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் திருப்பரங்குன்றம் பிரச்சனையைப் பேசுகிறார். அந்த மலையின் வழிபாட்டு தலங்கள், ஆதியில் இயற்கையிடம் இருந்தது, பின் சமணர்கள் தங்களுக்கான வாழிடங்களாக மாற்றி, சிற்பங்கள் தீட்டி இன்றளவும் கால சாட்சியாக நிற்பது, அதன் பின் சைவம் வந்தது, வைணவம் வந்தது, முருகன் வள்ளி தெய்வானையோடு வந்து சேர்ந்தது, அத்துடன் இன்ன பிற சிறு பெரு தெய்வங்கள் கூடிக் குழுவியது, மலையைச் சுற்றி நாட்டார் தெய்வங்கள் வந்தது. மலை உச்சியில் காசிவிசுவநாதர் ஆலயம் வந்தது,உச்சிப் பிள்ளையார் கோவில் வந்தது,
அதற்கு பிறகு மலை உச்சியில் எந்த இந்துக் கடவுளுக்கும் தொந்தரவு இல்லாமல், மலையின் தனித்த பகுதியில் 800 வருடங்களுக்கு முன் சிக்கந்தர் தர்கா வந்தது, அங்குள்ள நெல்லித்தோப்பு, குதிரைச் சுனை, சமாதிகள், கந்தூரி உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் என்று கால வரையுடன் மலையின் ஒவ்வொரு பாகத்தையும் நிலவியல் அடையாளங்களுடன், மனித பண்பாட்டு, கலாச்சார கூறுகளுடன் தெளிவாக அடையாளப்படுத்துகிறார்.

இத்துடன் சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் புராண இதிகாச இலக்கியப் பாடல்கள் இக்காலக் கட்டத்தில் எல்லோராலும் கூறப்பட்டவைதான் ஆகவே மிக விரிவாக கூறாமல் சுருக்கமாகவே தந்திருக்கிறார்.
நாயக்கர் ஆட்சிக் காலத்திலிருந்து பல நூறு வருடங்களாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில், எப்பொழுதும் ஏற்றப்படாத, ஏற்ற முடியாத நில அளவைத்தூண், கலவரத்தை திட்டமிட்டு தூண்டுவதற்காக, சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்றச் சொல்லி தர்கா சொத்தை அபகரிக்க திட்டமிடும் சங்கிகள். 1923, 1931,1960,1962, 1965, 1978, 1996, 2014, 2017 என வரலாற்றின் வழிநெடுக வழக்கும் தீர்ப்புமாக நூற்றாண்டுகளை கடந்த ஒரு பிரச்சனை, இன்று காவி அரசியலால் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பெரும்பாலான தீர்ப்புகள் நியாயமாகவே கொடுக்கப்பட்டு இருப்பதை மிகவும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளன.

சமகாலமென்பது அரசியல் அதிகார வர்க்கத்தில், சங்கிகளால் நிரம்பி வழிகின்ற தருணமாக இருக்கிறது, நீதித்துறையில், காவல்துறையில், அரசு அதிகார வர்க்கங்கள் பெருமளவில் மனமாற்றம் பெற்று, இந்துத்துவ உணர்வைத் தாங்கி நிற்கிறார்கள். பணிக்காலம் முடிந்ததும் நேரடியான மதவெறியர்களாக தோற்றம் கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் பொன் மாணிக்கவேல் எனும் சிலைதடுப்பு அதிகாரி எனும் பெயரில் வலம் வந்த மூர்க்க சங்கி. அவர் சொல்கிறார் சிக்கந்தர் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உடல்களை எடுத்து மரபணு செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கு வாஞ்சி அருமையான பதிலடி கொடுக்கிறார். முதலில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு எடுப்போம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்றால் முதலில் இருந்து ஆரம்பிப்பது முறைதானே என்கிறார். இனி மூச்சு விடுவார்கள் “எந்த ஆயுதத்தை எந்த வேண்டும் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறான்” என்பதை சரியாகவே நாடி பிடித்திருக்கிறார்.

நீண்ட நெடுங்காலமாக அறத்தின் வழியாக நடைபெற்று வந்த வழக்குகள், இந்த ஒரு வருடத்தில் அது எப்படி அரசியலாக மாற்றப்பட்டு, முருகன் மாநாடு நடத்தி, மதவெறி அஜண்டாவை மிகப் பகிரங்கமாக அறிவித்து ,காவி அடிமை ராம ரவிக்குமார் எனும் கட்டப் பஞ்சாயத்து காரன் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வைத்து, மாண்பமை நீதிபதி என்ற சொல்லிற்கே களங்கம் ஏற்படுத்தும் அளவிற்கு, ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வில் திட்டமிட்டு வழக்கை எடுக்க வைத்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட தீர்ப்பை அறிவித்ததோடு மட்டும் அல்லாது,

நில அளவை கல்லில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை மிக உறுதியுடன் நொடிக்கு நொடி கண்காணித்து, ஒரு கட்டத்தில் தலைமைத் தாதாவே களத்திற்கு சென்று நேரடியாக கொலை செய்வது போல், சட்டத்தின் அத்தனை அதிகாரங்களையும், உலகறிய சட்டப் புத்தகங்கள், நீதிகள், வெட்கித் தலை குனியக் குனிய, கிஞ்சித்தும் அறமற்று ஒரு வெறி பிடித்த ரவுடியைப் போல நடந்து கொண்ட நீதியரசரை பார்த்து உலகமே அதிர்ச்சி அடைந்தது. தீபம் ஏற்றும் நேரம் கடந்த ஒரு நிமிடத்திற்குள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக பதிந்ததெல்லாம் உச்ச பட்ச அராஜகம்.

நல்ல வேளை தமிழ் நாடு அரசு அந்த அநீதிக்கு துணை போகாதது மட்டும் அல்லாமல் , இத்தீயச் செயலை உறுதியுடன் எதிர்த்து நின்றது மிகவும் பாராட்டிற்குரியது. ஒரு நல்ல மொழி நடையோடு, எளியோர்க்கும் அல்லது எவர்க்கும் புரியும் வண்ணம் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
இவரது எழுத்தில் நான் ரசித்த ஒரு வரி “இசைப்பார் இல்லாவிடில் ராகம் இல்லாமலா போய்விடும்” என்று திருப்பரங்குன்றம் வழக்குகளில் சமண மதத்தை சார்ந்தோரை அழைக்காதது குறித்து விசனப்படுகிறார்.நீதியின் பக்கம் நின்று பேசுவதற்கு ஆட்கள் இல்லாவிடில் நீதி செத்துப் போய்விடுமா என்ன என்று, நீதியின் பக்கம் நின்று துணிச்சலாக நானிருக்கிறேன் என்று பேசியிருக்கிறார் வாஞ்சிநாதன்.

முதல் புத்தகம் என்று நம்ப முடியாத அளவு சிறப்பாக இருக்கிறது. அரசாங்கம் அல்லது பொது அமைப்புகள் தலையிட்டு இப்புத்தகத்தை மக்கள் பதிப்பாக வெளியீடு செய்து, அனைத்து மக்கள் கைகளிலும் வாசிப்பிற்கும் இப்புத்தகம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உண்மையை உரக்கச் சொன்ன களப் போராளி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்

ஆண்டு 2026
பக்கம் 372
விலை 300

வெளியீடு
யாழினியன் பதிப்பகம்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *