தேசம் பதற்றமடைகிறது
எந்தப் பதற்றமின்றி
ஆயுள் காலப் பொய்களை
அள்ளி வீசுகிறார் பேரரசர்
எரிவாயு கிடங்குகள்
மூடத் துவங்கி விட்டார்கள்
சமையலறைகள் புகையத் துவங்கி விட்டன
இனி வயிறுகள் யாவும்
தீப்பிடிக்கும்
பண மதிப்பிழப்பில்
வங்கி முன் நின்றார்கள்
கொரொனாவில்
மருத்துவமனைகளில் நின்றார்கள்
இப்போது
எரிபொருள் நிலையங்கள் முன்
நிற்கிறார்கள்
நாட்டை
நடுத்தெருவில் நிறுத்துவது
எங்கள் மன்னனின்
பொழுதுபோக்குகளில் ஒன்று
ஊடகங்கள் கேள்விக்கு
நடந்து போகச் சொல்வார்
சமையலற்ற உணவை பரிந்துரைப்பார்
ஆடையற்ற வாழ்வும் நிகழும்
கூச்சம் கொள்ளாதீர்
பேரரசில் சிறுமதி மந்திரிகள் ஏராளம்
மின்சாரம் நின்று போகும்
பகலில்
பனையோலை விசிறி
வைத்திருங்கள்
இரவில்
சிக்கி முக்கி கல் உரச கற்றுக் கொள்ளுங்கள்
ஏனெனில்
பூர்வகுடிகள் நாம்
வாழ்வை
பின்னோக்கி
நகர்த்தி விட்டு
விளம்பரப் பதாகைகளில்
இரு கைகள் கட்டி
வெட்கமின்றி
சிரிப்பார்கள்
நம் வல்லரசர்கள்

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை.
Leave a Reply