வருத்தக் குறிகள்

அவர்கள்
நம்மிடமிருந்தே பிறந்தவர்கள்
நாமே வளர்த்தோம்
நம் கனவுகளின் மீது
எச்சில் துப்பி
எழுந்து சென்றார்கள்

எங்கே தவறு? நிகழ்ந்தது
எப்போது வழி சிதறியது?
கையில் இருந்த ஆடுகள்
எப்படி களவு போயின?

நம் பிள்ளைகள்
நம் கண்முன்னே
கூத்தாடியின் பின்னால்
கூட்டமாக ஓடுகின்றனர்

ரசிக வெறி —
மெதுவான நஞ்சு
அவர்கள் அதை
இன்பமென குடிக்கின்றனர்

சமூகம்
பின்நோக்கி நகர்கிறது
அறிவற்ற பெருங்கூட்டம்
தீரவியலாத நோய்மை

மனநோய்களின் பெருக்கு
நாகரிகத்தின் முகமூடியை
கிழித்து விடுகிறது

நூறாண்டு போராட்டத்தின்
வளங்கள்
ஒரே தலைமுறையில்
சாம்பலாகின்றன

மீள வேண்டும் என்றால் —
ஆயிரம் ஆண்டுகள் கூட
போதாது

நரகம் என்பது
இடமல்ல
மூடர்களால் சூழப்பட்ட
ஒரு காலம்

தங்கள் தலையில்
தாங்களே தீ வைத்துக் கொண்டு
சிரிக்கும் மனிதர்கள்

இறுதியில்
மிஞ்சுவது —
கரிந்த அடையாளங்கள் மட்டுமே

செ. தமிழ்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *