(சங்க இலக்கியத்தில் மேகங்கள் – ஓர் அறிவியல் பார்வை)
மிளகுக் கொடிகள் வளர்ந்து செழிந்துள்ள அடுக்கடுக்கான மலைத் தொடர்களைக் கொண்ட கானகம். ‘மங்குல்’ எனப்படும் மேகம் இரவு முழுவதும் மழையைக் கொட்டிக் கொண்டே இருந்தது, விடாது முழக்கமிட்டு பெருமழையைக் கொடுத்துச் சென்றது. இதை அறியாத மயிர்களடர்ந்த உடலைக் கொண்ட குரங்கு ஒன்று பலாப் பழத்தைப் பறிக்க முயன்றது. அந்தோ மணம் பொருந்திய அந்தப் பழம் வழுக்கி இரவு கொட்டிய மழையால் மலையின் வழியாகப் பெருக்கெடுத்து வீழும் அருவியில் விழுந்து மலையடியில் இருக்கும் உணவு உண்ணும் இடத்தில் போய்ச் சேர்ந்துவிட்டது’
இப்படி குறுந்தொகையில் சேந்தன்பூதனார் என்ற புலவர் ‘மங்குல்’ என்ற மேகத்தைப் பதிவு செய்கிறார்.
‘கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்’(குறுந்தொகை: 90)
மங்குல் என்பது முகிலின் ஒரு வகை. முகில் எனப்படும் மேகங்களை பல்வேறு வகையாகப் பண்டைத் தமிழர்கள் பிரித்தறிந்துள்ளனர். மேகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டாக உருவானது. மேல்+கம் அதாவது மேலே உள்ள நீர் என்று பொருள். ‘கம்’ என்றால் நீர் என்று பொருள் தருகிறது கழகத் தமிழ் அகராதி. சமற்கிருத மொழியில் மேகம் என்ற சொல்லும் உள்ளது. மேகத்தைப் பற்றிய பல பெயர்களைக் குறிக்க முற்படும் சூளாமணி நிகண்டு,
மங்குல், சீதம், பயோதரம், தாராதாரம், குயின், மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமுதம், கொண்மூ, முகில், விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி ஆகிய 23 பெயர்களைக் குறிக்கின்றது.
‘பயனுறு மங்குல் நீதம் பயோதரந்
தாராதாரம் குயின் மழை எழிலி
மஞ்சகொண்டல் சீமூதங் கொண்மூ
வியன் முகில் விண் விசும்பு விளையுமால்
சலதரஞ் செல் புயல் கனங்
கந்தரங் கார் போற்று மை மாரி மேகம்”
மேகங்களை உலக வான்பொருளியல் அமைவகம் (World Meteorological Organisation) மூன்று பெரும் இனவகையாகப் பிரிக்கின்றது. குறிப்பாக இதன் வடிவம், உயரம், இயங்கும் தன்மை இவற்றைக் கொண்டு இப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது.
குவிந்து அடர்த்தியாக உள்ள மேகத்தை குமுலஸ் (cumulus or heap clouds) என்றும், அடுக்கடுக்கான தட்டங்களாக உள்ள மேகத்தை ஸ்ட்ராடஸ் stratus or sheet clouds) என்றும், இழைகளாக உள்ள மேகத்தை சிர்ரஸ் (cirrus or fubrous clouds) என்றும் பகுக்கின்றது. இவை மேலும் பத்துப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மங்குல்: (Stratus)
தட்டு வடிவில் அடுக்கடுக்கான ‘ஸ்டிரேடஸ்’3 மேகம் சாம்பல் நிறத்தில் இருந்து வெள்ளையான நிறத்தில் அதாவது புகை வண்ணத்தில் இருக்கும் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகிறது. இதை ‘மங்குல்’ என்று அழைக்கலாம். இவை நீரைக் கடலில் இருந்து கொண்டு வருகின்றன, இவ்வாறு வந்த கனமற்ற நீர்த் திவலைகள் பின்னர் கனத்து நீர்த்துளிகளாக மாறி மழையாகின்றன.
இதற்குரிய விளக்கத்தை புறநானூறு கூறுகின்றது,
முனைசுட வெழுந்த
மங்குல் மாப்புகை (புறநானூறு. 103)
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் (புறநானூறு. 329)
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் (குறுந்தொகை. 55)
ஆகவே புகை வண்ணமான நீர்த் துவலைகளைச் சுமந்து வரும் மங்குல் மேகம் மழையைக் கொண்டு வரும் தூதனாக விளங்குகிறது.
கொண்மூ: (Cumulus)
உருண்டு திரண்டு குவிந்து இருக்கும் மேகத்தை குமுலசு4 என்று விளக்குகின்றனர். இலத்தீன் மொழியில் குமுலசு என்றால் குவியல் என்று பொருள். அது மட்டுமல்லாது இம்மேகம் அடர்த்தியாக, தனியாக, உப்பியதாக, குவியலாக, கருமையாகக் காணப்படும்.6
பெரும் மழையைக் கொட்டும் மேகம் போலவும், கருப்பாகவும், மலையைப் போலவும், யானையைப் போலவும் ‘கொண்மூ’ இருக்கும் என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. கொண்மூ முகிலைப் பற்றிய குறிப்புகள் பின்வரும் குறிப்புகள் அதன் அமைப்பை விளக்குகின்றன.
‘மாமலையணைந்த கொண்மூ’(பட்டினப்பாலை: 95)
(பெரும் மலையைப் போன்றது)
நிரைசெலனிவப்பிற் கொண்மூ மயங்கி (குறிஞ்சிப்பாட்டு: 50)
(அடுக்காகவும் உயர்ந்தும் காணப்படும்)
களிறு நிரைத்தவைபோல் கொண்மூ (கலித்தொகை: 82)
( யானைவரிசையைப் போல)
கருங்கை யானை கொண்மூவாக (புறநானூறு: 369)
(கருத்த கையுடைய யானையைப் போல)
செருநவில் வேழம் கொண்மூ ஆக (புறநானூறு. 373)
(போர் யானையைப் போல)
இடியுடன் கூடிய நீர் நிறையப் பெற்ற இந்த மேகம் மழையை உடனே தரவல்லது.
கொண்மூ முகலைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் யானையோ அல்லது மலையோ உவமையாகச் சொல்லப்படுகிறது. ஆகவே உருண்டு திரண்ட கரிய மேகத்தையே கொண்மூ என்று பண்டைத் தமிழ் மக்கள் குறித்தனர். இது குமுலசு வகை மேகம் எனக் குறிப்பிடலாம்.
மஞ்சு: (cirrus)
சங்க இலக்கியங்களில் 11 இடங்களில் மட்டுமே இம்மேகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. மஞ்சு மேகம் மிக மென்மையான தன்மையோடு அடர்த்தி இன்றிக் காணப்படும்.
‘புகைமுறை அம்மஞ்சு ஊர’ என்ற இடத்தில் புகையைப் போன்றது என்ற குறிப்பு கிடைக்கின்றது.
சிர்ரஸ் எனப்படும் மேகம் சுருள் சுருளாக புகை போன்று காணப்படும் என்று அறிவியல் விளக்குகிறது. இது 20000 அடி உயரத்தில் காணப்படும்.
‘பாடுவார் பாணிச் சீரும்,
ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும் (பரிபாடல்: 8)
என்று இசையின் கூறுகளான பாணி, சீர், தாளம் ஆகியவை பற்றிக் கூறி கூடவே மஞ்சு மேகத்தின்அசைவையும் புலவர் கூறுகிறார்.
‘மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து’ (கலித்தொகை: 49)
மஞ்சு மேகம் உயர்ந்து செல்லும் (இவர்தல் என்றால் உயர்தல் என்று பொருள்) மலைத் தொடர்.
‘இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர’ (அகநானூறு. 97)
இப்படியாக மற்ற மேகங்களை விட மலையின் உயரத்தில் காணப்படும் இந்த மஞ்சு உடனடி மழையைத் தருவதில்லை.
இந்த மூன்று பெரும் பிரிவுகள் தவிர மேலும் ஏழு பிரிவுகள் உள்ளன.
சிர்ரோகுமுலஸ்6 (cirrocumulus) என்ற மேகத்தை ‘மஞ்சுகொண்மூ’ என்று குறிக்கலாம். இதன் தன்மையைக் கொண்டு அதாவது சற்றே பெரிய நீர்துளிகளைக் கொண்டும் ஆனால் கருத்த மேகமாக இல்லாமல் பஞ்சுபோல் இருப்பதாலும் இது மழையைக் கொடுக்கும் அடுத்த நிலைக்கு மாற்றமடைகிறது.
சிர்ரோஸ்ட்ராடஸ் (cirrostratus) என்ற ‘மஞ்சுமங்குல்’ நல்ல வெள்ளை நிறம் கொண்டது, இதில் பனிகட்டிகள் காணப்படும், ஈரத்தன்மை அதிகமாக இருக்கும். இம்மேகம் தோன்றி ஒரு நாளைக்குள் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும்.
ஆட்டோகுமுலஸ் (altocumulus) எனப்படும் மேகம் அடர்த்தியானதாகவும், மழைத் துளிகளைக் கொண்டதாகவும் இருக்கும். இவை தொடர்ச்சியாக காற்றில் பயணம் செய்யக் கூடியவை. இது கருஞ்சாம்பல் வண்ணத்தில் காணப்படும். இதை ‘விண்கொண்மூ’ என்று குறிப்பிடலாம்.
ஆல்டோஸ்ட்ராடஸ் (alstostratus) என்ற ‘விண்மங்குல்’ ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது, சற்றே சாம்பல் நிறத்திலும் காணப்படும். ஒட்டு மொத்தமாக வாளத்தை மறைத்துக் கொள்ளும். அடர்ந்த காற்றுத் துகள்களால் இவை தோன்றுகின்றன.
நிம்போஸ்ட்ராடஸ் (nimbostratus) என்ற மேகம் மழைமேகமாக இருக்கும், நிம்போ என்றால் கிரேக்க மொழியில் மழை என்று பொருள் தமிழில் ‘கார்’ என்ற சொல்லுக்கு மழை, காலம் என்று பொருள் உள்ளது எனவே ‘கார்மங்குல்’ என்று இதை அழைக்கலாம்.
‘கருவிக் கார்இடி இராஇய’ (அகநானூறு.139)
ஸ்ட்ராடோகுமுலஸ் (stratocumulus) என்ற வகை மேகம் பந்து பந்தாக புகை போன்று வானத்தில் குவிந்திருக்கும். இவை தூரல் போன்ற மெல்லிய மழையையும் பனியையும் கொடுக்கக் கூடியவை. இவற்றை மங்குல்கொண்மூ என்று குறிப்பிடலாம்.
குமுலோநிம்பஸ் (cumulonimbus) எனப்படும் மேகம் இடியுடன் கூடிய மழையைக் கொண்டு வருவதாகும். இவ்வாறு இடியுடன் கூடிய மேகத்தை ‘எழிலி’ என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. எப்போதும் உருமிக் கொண்டும் ஒலி எழுப்பிக் கொண்டும் இருக்கும் இந்த மேகம் நல்ல மழையைக் கொடுக்கும். உயரமானதும், அடர்த்தியானதும் இடியுடன் கூடிய புயலைக் கொண்டு வரும் இயல்பு கொண்டவை என்று அறிவியல் கூறுகிறது. – ( The Concise Oxford dictionary of Ecology – Michael Allaby)
‘பறைக்குரல் எழிலி’(அகநானூறு.23)
பறையோசையை ஒத்த குரல் தரும் மேகம்.
பெரும் பெயல் பொழிந்த தொழில் எழிலி (நற்றிணை. 5)
பெருமளவு மழையைப் பொழியும் மேகம்
பெருங்கலி எழிலி (நற்றிணை:139)
அதிர் குரல் எழிலி. (நற்றிணை: 228)
பெரும் சத்தமிடும் மேகம்
மழையும் மழையைக் கொணரும் முகிலும் தமிழ் மக்கள் வாழ்வியலில் பிரிக்க முடியாதவை.
பாமயன்

Leave a Reply