பல முக்கியமான மாநிலங்களில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் தேர்தல் சந்தடிச் சாக்கில் மோடி அரசு அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒரு மாபெரும் மோசடியை நடத்தத் திட்டமிடுகிறார்கள். அதாவது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றியமைக்கப் போகிறார்கள்.
அதன்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-லிருந்து 816-ஆக உயரவிருக்கிறது. மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை ஐம்பது விழுக்காடாக உயருமாம். அப்படியானால் ஏற்கனவே அதிகத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் உ.பி., ம.பி., பிகார், ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களின் எண்ணிக்கை மேலும் கணிசமாக உயரும்.
எடுத்துக்காட்டாக, உ.பி. மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் 80-லிருந்து 120-ஆக உயரும். ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பங்கு 40-லிருந்து வெறும் 60-ஆகவே மாறும். தற்போது 130 தொகுதிகள் பெற்றிருக்கும் தென் மாநிலங்கள் வெறும் 195 தொகுதிகளையேப் பெறுவார்கள்.
தெற்கைத் தவிர்த்த பிற மாநிலங்கள் 620 தொகுதிகளைக் கொண்டிருப்பார்கள். இதன்படி தெற்கத்தி மக்களாகிய நாம் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்துவிடுவோம். தெற்கு வடக்குக்கு அடிமையாகும் நிலை உருவாகும். ஏற்கனவே ‘மதராசி’ என்று தெற்கத்தி மக்களை வேற்றுப்படுத்தும் சில வட இந்தியர்களின் காலனியாதிக்க மனநிலை மேலும் மோசமாகும்.
இது மட்டுமல்ல, தொகுதிகள் மறுசீரமைப்புத் திட்டத்தின் இன்னொரு அம்சமாக சில மாநிலங்களை இரண்டு மூன்றாகப் பிரித்து, அவற்றை வலுவிழக்கச் செய்யும் திட்டமும் இருக்கிறதாம்.
அண்மையில் தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்போம் என்று கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற அமைப்புக்கள் முக்கியமான முடிவுகளை, திட்டங்களை இப்படித்தான் முக்கியத்துவம் இல்லாதவர்கள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிட்டு, மக்களைத் தயாரிப்பார்கள். அவர்களின் திட்டத்துக்கு கொல்லைப்புறம் வழியாக படிப்படியாக அங்கீகாரம் பெற முயல்வார்கள்.
மேற்கு வங்கம் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க பாஜக அரசு திட்டமிடுகிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜியும் நேற்று பேசியிருக்கிறார். மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களை பிகார் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் இணைக்கத் திட்டமிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தற்போதிருக்கும் மொழிவழி மாநிலங்களைத் தகர்த்து ஜனபாகங்களாக நாட்டைத் துண்டாடுவது இந்துத்துவச் ச(க்)திகளின் நீண்டகாலத் திட்டம். அதன்படி தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களோடு இணைத்து நம்மை வலுவிழக்கச் செய்வார்கள்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்று சிந்திக்கிற, பேசுகிற நம்மைப் போன்றவர்கள் சிதறுண்டு போவோம். “எங்கே இருந்தால் என்ன? அகண்ட பாரதத்தின் அங்கமாகத் தானே இருக்கிறோம்?” என்று சங்கிகள் விளக்கமளிப்பார்கள். “பாரத் மாதா கீ” முழக்கம் பன்மடங்கு உயரும்.
மொத்தத்தில். வடக்கு வலுவாகும், தெற்கு வலுவிழக்கும். அப்போது இந்தி இன்னும் எளிதில் புகும், எல்லாம் இந்தி, சமற்கிருத மயமாகும், தென்னிந்தியர்கள் இரண்டாம்தர குடிமக்கள் ஆவோம். கொரியா, ஏமன், சூடான் போன்ற நாடுகள் போல ஒன்றிணைந்த இந்தியா வட இந்தியா–தென்னிந்தியா என்று துண்டாடப்படும். அவர்கள் உருவாக்கும் பிரச்சினையை நம் தலைகளில் கட்டுவார்கள். நம்மை பிரிவினைவாதிகள் என்று சுட்டுவார்கள். நம்முடைய வளர்ச்சி தடைபடும். அமைதி கெடும். அனைத்தும் நாசமாகும்.
இந்நிலையில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?:
[] தற்போதிருக்கும் மொழிவழி மாநிலங்களை எக்காரணம் கொண்டும் பிரிக்கக் கூடாது.
[] 2027 மக்கள் கணக்கெடுப்பு செம்மையாக நடாத்தி முடிக்கப்பட வேண்டும்.
[] வெறும் மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படக் கூடாது. மாநில மக்களின் வளர்ச்சி விகிதம் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு போன்றவையும் கணக்கிலெடுக்கப்பட வேண்டும்.
[] அனைத்திற்கும் மேலாக, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் அதன் நிர்வாகிகளின் தேசவிரோத சிந்தனைகளை, திட்டங்களை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, அந்தந்த மாநில மக்களின் சமூக-பொருளாதார-அரசியல் விருப்பு, வெறுப்புக்களின் அடிப்படையில் மட்டுமே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவில் யாரும் யாருக்கும் அடிமைகள் அல்ல என்பதை அனைவரும் உரக்கச் சொல்வோம்.

முனைவர் சுப. உதயகுமாரன்
தலைமைப் பணியாளர்,
பச்சைத் தமிழகம் கட்சி,
Leave a Reply