த.வெ.க வின் தேர்தல் வெற்றியை எவ்வாறு அணுகுவது?

த.வெ.க வின் தேர்தல் வெற்றிக்குப்பிறகு தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் இயங்கி வந்த பாசிச அணியிலும் பாசிச எதிர்ப்பு அணியிலும் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தேர்தல் அணிக் கூட்டு மாறியிருக்கிறது. 2019 ல் திமுகவால் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி முதல்வர் ஜெயா இறப்பிற்குப்பின் அதிமுகவின் தோல்களில் ஏறி தமிழ்நாட்டில் காலூன்றத் துடித்த பாசிச பாஜகவை அதன் எல்லைக்குள் கடிவாளம் போட்டு கட்டி வைத்தது.

2019 க்குப் பிறகு நடைபெற்ற நாடுதழுவிய தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தத் திணறிக் கொண்டிருந்த கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு தேர்தல் உத்தியை தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி உருவாக்கித் தந்தது.
பாசிச பாஜகவிற்கு எதிராக நாடுதழுவிய ஒரு அணியை உருவாக்குவதற்குத் தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி் ஓர் எடுத்த்துக்காட்டாய் விளங்கியது.

2024 ல் 400 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் “அறுதிப்பெரும்பான்மை பெறுவோம்! அரசியல் சட்டத்தைத்திருத்துவோம்!” என்ற பாஜகவின் முழக்கத்தை வெற்றிகரமாக முறியடித்ததோடு பாஜக பெரும்பான்மை இடம்பெறவிடாமல் இந்துராஷ்டிரத்தை அமைக்கும் அதன் தீவிர ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியது.

அண்மையில் தமிழ்நாடு ,கேரளா , மேற்குவங்கம் என அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் பாசிச எதிர்ப்பு அணியில் இருந்த திமுக , திரிணாமுல் , சிபிஎம் ஆகிய கட்சிகள் மாநில அளவில் பெற்றிருந்த பலம் உடைக்கப்பட்டிருப்பதோடு தேர்தல் தோல்வி இக்கட்சிகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க வின் வெற்றி திமுக கூட்டணியைப் பிளவுபடுத்தியிருப்பதோடு் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இது பாசிச சக்திகளின் கைகளை வலுப்படுத்தியிருப்பதோடு பாசிச எதிர்ப்பு அணிகளின் ஒற்றுமையை சிதறடித்திருக்கிறது. த.வெ.க ஒன்றிய அரசின் இணக்கப்பாடான ஓர் அணுகுமுறையைக் கையாண்டு் வருவதும் இந்தியா கூட்டணியில் உறுப்பு வகிக்காமல் தமிழ்நாட்டில் மட்டும் தனிக் கூட்டணி எனத் திசைதிருப்புவதுமாக த.வெ.க. வின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதேவேளையில் காங்கிரசின் குறுகிய நோக்க அணுகுமுறையின் காரணமாக திமுக , இந்தியா கூட்டணியில் இருந்து தள்ளியிருப்பதாக அறிவித்திருப்பதோடு ஒத்தக் கருத்துடைய செயல்பாடுகளில் மட்டும் இணைவதாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் உறுப்பு வகித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ , விசிக , மதிமுக , ஐயூஎம்எல் , ஆகிய கட்சிகள் த.வெ.க வுடன் கைகோர்த்திருக்கின்றன. இவ்வாறு திமுக கூட்டணி சிதறிய பிறகு திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் த.வெ.க ஒன்றிய அரசுடன் இணக்கப்போக்கோடு செயல்படுகிறது. மறுமுனையில் திமுக வின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பது தற்போதைக்குக் கணிக்க முடியாததாக இருக்கிறது. ஒருவேளை திமுக பாஜகவின் பக்கம் சாயுமானால் அது தமிழ்நாட்டின் சமயச்சார்பின்மை , சமூகநீதி , கூட்டாட்சி உரிமைகளுக்கான எதிர்ப்பு அரசியலுக்கு ஒரு பெரிய பின்னடைவைக் கொடுக்கும். மாநில , நாடு தழுவிய அளவில் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

த.வெ. க. வின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெகுவாக உரையாடப்பட்டிருக்க வேண்டிய மைய கருப்பொருள் இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் மைய உரையாடல் திசைதிருப்பப்படுவதோடு பாசிச்எதிர்ப்பு அரசியல் தொடர்பான உரையாடல் பொதுமேடைக்கு வருவதைத் தடுத்து வருகிறது.

இந்திய அளவில் பாசிச எதிர்ப்பின் எதிர்காலம் சமூகநீதி , மாநிலங்களின் தன்னாட்சி ஆகியவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் தான் நிறைவடையக் கூடியது. இந்தத் தேரை யார் இழுத்துச்செல்லப் போவது? என்பது தான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி அரசியல் அணிகளில் ஏற்படும் மாற்றத்தைக் கூட தடுப்பதற்கும் ஒரு வலுவான பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டுவதற்கும் இன்றைய உடனடியானத் தேவையாக அமைந்திருப்பது மேற்சொன்ன சமூகநீதி , மாநிலங்களின் தன்னாட்சி ஆகிய கோட்பாடுகளில் ஊன்றி நிற்பதேயாகும். பல்வேறு அணிகளின் அரசியல் தடுமாற்றத்தையும் அணிசேர்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் தடுத்து நிறுத்தும். இது தேர்தல் கட்சிகளையும் அவர்கள் எந்த அணியில் நிற்கப்போகிறார்கள் என்ற தெளிவையும் நமக்கு வழங்கும். த.வெ.க வின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்கள் இயக்கங்கள் செய்ய வேண்டிய அடிப்படையான பணி இதுவாகத் தான் இருக்கும். பாசிச எதிர்ப்பு அணியில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையைப் பற்றித் துளியும் அக்கறையில்லாமல் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தை , பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற பின்னடைவை வெறும் திமுகவின் தோல்வியாக சுருக்கிப் பார்ப்பது போன்ற பெருந்தீங்கு வேறொன்றும் இல்லை.

குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *